இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்று தெலங்கானா முதல்வரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அவருக்கு இங்கு நடப்பது தெரியாது. தவறான தகவல் கொடுத்து வரவழைத்து திமுக அரசை புகழ வைத்துள்ளனர், இது தவறான செயல்

‘‘207 பள்ளிகளை மூடிவிட்டு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ஏமாற்றி அழைத்து வணநது திமுக கல்வி விழா நடத்தி நாடகமாடுகிறது’’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய அவர், ‘‘முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அடக்குமுறையைத் தகர்த்தெறிந்து இங்கு குழுமியிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு இடையூறு செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். மக்களைத் தடுக்கும் நோக்கத்தோடு செந்தில் பாலாஜி பேச்சைக் கேட்டு நெறுக்கடி கொடுக்கிறீர்கள்.

ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்களோ அவ்வளவு வீரியத்தோடு நிகழ்ச்சிகளை நடத்துவோம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிற செந்தில்பாலாஜி எப்படிப்பட்டவர் என்பது கரூர் மக்களுக்கு நன்கு தெரியும். சிவாஜிகணேசன் மட்டும் மறையாமல் இருந்தால், அவரே இவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருப்பார். சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேடம் அணிவார். புதுப்புது யுக்திகளைக் கையாள்வார். அத்தனையும் தீய எண்ணம் கொண்டவர். மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்து செயல்படக்கூடியவர்.

கடந்த தேர்தலின்போது பெண்களுக்கு கொலுசு கொடுத்தார். அதுவும் போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர் செந்தில்பாலாஜி. ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றியவர். இந்த மாவட்டத்தில் காவிரியாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது. அந்த மணலின் விலை மட்டும் 1 கோடி ரூபாய், ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய்க்கு மணல் அள்ளுகிறார்கள். செந்தில் பாலாஜி ஆதரவில் தான் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கிறார்கள். அவர் 5 கட்சிக்கு போய்விட்டு வந்தவர். அடுத்து எங்கு போவார் என்று தெரியவில்லை. தேர்தல் முடியும்வரை திமுகவில் இருப்பார். தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், எந்தக் கட்சிக்கு போவார் என்று அப்புறம் சொல்கிறேன்.

செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் அளவுக்கு மீறி அதிகாரம் கொடுத்திருப்பதால் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி அவர்களே கீழே இருக்கும் சக்கரம் அடுத்தாண்டு மேலே வரும். ஒரு கூட்டத்துக்கு வரும் மக்களை தடுக்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

அதிமுக ஆட்சியில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தேன் என்று படித்துப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். இது அதிமுகவுடைய திறமை. ஆனால் திமுகவுக்கு அந்த திறமையில்லை. இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்ற அச்சத்தில் நடுங்குகிறார் ஸ்டாலின்.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததும் ஸ்டாலின் மிரண்டுவிட்டார். சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டார், அதிமுக கட்சி, யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். அதுக்கு நீங்க ஏன் நடுங்கி கேள்வி எழுப்புகிறீர்கள்..? எப்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததோ அப்போதே ஸ்டாலினுக்கும் சகாக்களுக்கும் பயம் வந்துவிட்டது. அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன், செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக்கொள்ள முடியாது. 450 நாட்கள் சிறையில் இருந்தவர் அவர். அவருக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தால், அவர்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது.

அதிமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டால்போதும், உடனே அவர் மீது செந்தில் பாலாஜி கேஸ் போடுவார், மிரட்டுவார். இங்கிருக்கும் பெரும்பாலான நபர்கள் ஒவ்வொருவர் மீது ஆறேழு கேஸ் இருக்கிறது என்று சொன்னார்கள். கவலைப்படாதீர்கள், அடுத்தாண்டு அதிமுக ஆட்சி வரும். யார் யாரெல்லாம் உங்கள் மீது பொய் வழக்குப் போட்டார்களோ அவர்களைக் கண்டறிந்து விசாரிக்கப்பட்டு, தவறாக பொய் வழக்குப் போட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எதற்கும் அதிமுகவினர் பயப்படத் தேவையில்லை. நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். கடைசி வரை இருப்போம்.

1974ம் ஆண்டு அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்ட நாளிலிருந்து, அதாவது 51 ஆண்டுகாலம் அதிமுகவுக்கு உங்களைபோல் உழைத்துக்கொண்டு விசுவாசமாக இருக்கிறேன். எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் துணை. எவ்வளவு அடக்குமுறை வந்தாலும் தூள் தூளாக நொறுக்கும் வலிமை விஜயபாஸ்கருக்கு உண்டு.

வேறு எந்த மாவட்டத்திலும் இந்த பிரச்னைகள் கிடையாது, இந்த மாவட்டத்தில் மட்டும்தான் பொய் வழக்குப் போட்டு அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை வெளியேற்றிவிடலாம் என்ற எண்ணம் இருந்தால் மறந்துவிடுங்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் செந்தில்பாலாஜிக்கு விரைவில் வரும். அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வென்று, நீங்கள் செய்த அட்டூழியத்துக்கு பதிலடி கொடுக்கப்படும். எவ்வளவு வழக்கு இருக்கிறது தெரியுமா? செந்தில் பாலாஜி அவர்களே உங்கள் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து ஒருபோதும் நீங்கள் தப்பிக்க முடியாது. அந்தளவுக்கு வலிமையான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

நீங்கள் தேர்தல் வரை வெளியில் இருப்பீர்களா என்பதே சந்தேகமாக உள்ளது. வழக்கு விரைவாக முடிந்தால் இருக்குமிடம் கரூர் அல்ல, பாதுகாப்பான இடத்துக்குச் செல்வீர்கள். எங்கள் கட்சிக்காரரை மிரட்டுவது எந்த வகையில் நியாயம்,.? இந்த கட்சிதான் உங்களுக்கு அடையாளம் கொடுத்தது. அதிமுக தொண்டர்கள் தான் பகலென்றும் இரவென்றும் பாராமல் உழைத்து உங்களை வெற்றி பெற வைத்தனர். மனசாட்சி வேண்டாமா? எடுத்த உடனே அமைச்சராகி விட்டீர்களா? அதிமுக தொண்டரின் உழைப்பால் எம்.எல்.ஏ, அமைச்சர் பதவி கிடைத்தது. அதன்பேரில்தான் திமுகவில் இந்த வாய்ப்புக் கிடைத்தது.

கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஸ்டாலின் கொண்டாடுகிறார். அதிமுக ஆட்சியில்தான் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தோம். கிராமம் முதல் நகரம் வரை ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என தரம் உயர்த்தினோம், கற்போர் எண்ணிக்கை உயர்த்தியது அதிமுக. கொள்கை விளக்க குறிப்புகளை எடுத்துப் பாருங்கள் உண்மை தெரியும்.

திமுக ஆட்சியில் பள்ளி சேர்க்கை குறைந்துவிட்டது, அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம். திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடினார்கள். இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்று தெலங்கானா முதல்வரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அவருக்கு இங்கு நடப்பது தெரியாது. தவறான தகவல் கொடுத்து வரவழைத்து திமுக அரசை புகழ வைத்துள்ளனர், இது தவறான செயல்’’ என கடுமையாக விமர்சித்தார்.