கேரளாவில் தமிழ் ஓட்டுநர் மீதான தாக்குதலை வேடிக்கைப் பார்ப்பதா? இங்கு நடைபெறுவது தமிழர்களுக்கான ஆட்சியா? சீமான்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி மனப்பான்மையுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ள சீமான் தமிழ்நாட்டில் நடைபெறுவது தமிழர்களுக்கான ஆட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக ஓட்டுநர் மீது தாக்குதல்
தமிழகப் பகுதியிலிருந்து கேரளாவிற்கு ஏலத்தோட்ட பணிக்குச் சென்ற பெண் தொழிலாளர்களின் வாகனத்தை வழி மறித்து, மதுபோதையில் டிரைவர் மற்றும் வாகனத்தில் வந்த பெண்களை தாக்கிய சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம் சேத்துக்குளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் மீது இனவெறி மனப்பான்மையுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை தடுக்க முயன்ற தமிழ்ப் பெண் தொழிலாளர்களையும் தாக்குதலில் ஈடுபட்ட மலையாளிகள் ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்
அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து தொல்தமிழ் குறவர்குடி மக்களை தாக்கி, பெண்களை வன்புணர்வு செய்த கொடுமைகளை தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கைப் பார்த்த திமுக அரசு, தற்போது கேரளாவில் தமிழ் ஓட்டுநர் தாக்கப்படுவதையும் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தமிழ்நாட்டில் நடைபெறுவது தமிழர்களுக்கான ஆட்சியா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது? தமிழ் ஓட்டுநர் மீது இனவெறியுடன் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள கேரள மாநிலத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி..! முதல் நாள் விசாரணையில் நடந்தது என்ன.?