Asianet News TamilAsianet News Tamil

கோயிலுக்கு சீல் வைப்பது தான் திராவிட மாடலா? இதெல்லாம் வெட்கக்கேடு! ஸ்டாலினை சகட்டு மேனிக்கு விமர்சித்த சீமான்

அற்ப அரசியலுக்காகவும், சாதிய வாக்குக்காகவும் இரட்டை வேடமிடும் திமுக அரசின் இத்தகைய சந்தர்ப்பவாதத்தின் பெயர் தான் 'திராவிட மாடல்' ஆட்சியா? 

sealing the temple the Dravidian model? seeman question
Author
First Published Jun 8, 2023, 12:56 PM IST

சாதியத்தையும், தீண்டாமையையும் சமரசமின்றி எதிர்ப்போமென வாக்குறுதி அளித்துவிட்டு, சாதியவாதிகளின் செயலுக்குத் துணைபோகும் திமுக அரசின் இச்செயல் இழிவான அரசியலில்லையா? என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விழுப்புரம் அருகே, ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு முத்திரையிட்டு, அரசதிகாரிகள் மூடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கோயில் என்பது அனைத்து மக்களுக்குமான பொதுச்சொத்து; அங்கு சென்று வழிபாடு செய்ய எல்லோருக்கும் சமவுரிமைவுண்டு என்பதே சட்டம் முன்வைக்கும் சனநாயக நியதியாகும். சாதியைக் காரணமாகக் காட்டி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுப்பதும், கோயிலுக்குள் நுழையவே விடாது தடுப்பதும் எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதையும் படிங்க;- திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்! கிராமத்தை சுத்துபோட்ட 2000 போலீசார்! மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது?

sealing the temple the Dravidian model? seeman question

ஆதித்தொல்குடிகளுக்குக் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடுசெய்ய அனுமதி மறுக்கப்படும்போது சட்டத்தின் துணையோடு அவர்கள் உள்ளே நுழைய வழிவகை செய்வதும், வழிபாடு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதும்தான் சரியான நிர்வாக நடவடிக்கையாக இருக்க முடியும். அதனைவிடுத்து, கோயிலுக்கு முத்திரையிட்டு, அக்கோயிலை மொத்தமாக மூடுவது சிக்கலை மேலும் பெரிதுப்படுத்துமே ஒழிய, ஒருபோதும் தீர்வைத் தராது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமெனக் காரணம் கூறி கோயிலை இழுத்து மூடியிருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. இதன் மூலம் மக்களிடையே மேலும் பதற்றமும், இறுக்கமும்தான் உருவாகும். சாதியின் பெயரால் உரிமைகள் மறுக்கப்படும்போது, சக மக்கள் ஒடுக்கப்படும்போது ஆளும் அரசு உரிமையையும், நியாயத்தையும் நிலைநாட்ட வேண்டும் அதை விடுத்து சிக்கலைக் கிடப்பில் போடுவது ஜனநாயகத் துரோகமாகும்.

sealing the temple the Dravidian model? seeman question

கேரளாவில் முன்னெடுக்கப்பட்ட வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டுக் கூட்டத்தில், திராவிடத்தின் பெருமையெனக் கூறி, சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிற திமுகவின் தலைவரும், முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் அனுமதி மறுக்கப்பட்ட ஆதிக்குடி மக்களின் கோயில் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது கோயிலைப் பூட்டுவது வெட்கக்கேடு. சாதியத்தையும், தீண்டாமையையும் சமரசமின்றி எதிர்ப்போமென வாக்குறுதி அளித்துவிட்டு, சாதியவாதிகளின் செயலுக்குத் துணைபோகும் திமுக அரசின் இச்செயல் இழிவான அரசியலில்லையா? அற்ப அரசியலுக்காகவும், சாதிய வாக்குக்காகவும் இரட்டை வேடமிடும் திமுக அரசின் இத்தகைய சந்தர்ப்பவாதத்தின் பெயர் தான் 'திராவிட மாடல்' ஆட்சியா? 

இதையும் படிங்க;- இந்த லட்சணத்துல கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் சொல்ல வெட்கமில்லையா? முதல்வரை விளாசிய பாஜக.!

sealing the temple the Dravidian model? seeman question

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தராது கோயிலையே மூடுவதுதான் திமுகவின் சமூக நீதிக்கொள்கையா? ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 மாதங்களைக் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவோ. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் சொல்லவோ, சாதியத்தின் குறியீடாக இருக்கும் அந்தக் குடிநீர்த்தொட்டியை இடித்துத் தகர்க்கவோ முன்வராத திமுக அரசு, இக்கோயில் விவகாரத்தில் கோயில் வழிபாட்டுரிமையைப் பெற்றுத் தராது கோயிலையே முத்திரையிட்டு, மூடுவது எந்தவகையில் நியாயமாகும்? இதுதான் திராவிடம் சாதியத்தையும், தீண்டாமையையும் எதிர்க்கும் இலட்சணமா? பேரவலம்!

இதையும் படிங்க;-  வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிப்பது விவசாயிகளுக்கு திமுக செய்யும் பச்சை துரோகம்..! எச்சரிக்கும் சீமான்

sealing the temple the Dravidian model? seeman question

ஆகவே, மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டதைத் திரும்பப் பெற்று, கோயிலைத் திறக்க வேண்டுமெனவும், காவல்துறையினரின் பாதுகாப்போடும், அரசதிகாரிகளின் துணையோடும் ஆதிக்குடிகள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios