திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்! கிராமத்தை சுத்துபோட்ட 2000 போலீசார்! மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது?
விழுப்புரம் மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததை அடுத்து அந்த கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும் கூட காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற கட்டுப்பாடுகள் காலம், காலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
நவீனமயமான இந்த காலத்திலும் கூட திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய கூடாது என்பதில் ஊர் பகுதியில் வசித்து வரும் வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது திரெளபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி கும்பிட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் மேல்பாதி கிராமத்தில் இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் சர்ச்சைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து திரெளபதி அம்மன் கோயிலை இன்று காலை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
இதனால், மேம்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திரெளபதி அம்மன் கோயிலை சுற்றிலும் பேரிக்கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.