வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தேமுதிக சார்பில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி தலைவர் விஜயகாந்த் பேசுகையில், அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். எல்லோரும் பாதுகாப்பாக ஊருக்கு செல்லுங்கள் என்றார். இதனையடுத்து, கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசுகையில்:- எம்.ஜி.ஆர். 1973-ல் முதல்முறையாக கூட்டம் நடத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல்வரானார். அதுபோல விஜயகாந்த்தும் 2004-ல் மதுரையில் கட்சியை தொடங்கி இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். எனவே நீங்கள் எண்ணும் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். மதுரையின் மருமகளாக உங்கள் வீட்டு பெண்ணாகவே பேசுகிறேன். 

இதையும் படிங்க;- அரசுக்கு எதிராக வாக்களித்தது ஏன்..? ஓ.பி.எஸ்.க்கு நோட்டீஸ்.. சபாநாயகரின் அதிரடியால் தமிழக அரசியலில் பரபரப்பு.!

மதுரை மீனாட்சி அம்மன் அருளால் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வருகிறார். விஜயகாந்த் வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வென்றவர். விஜயகாந்த் பழைய கம்பீரத்தோடு சிங்கம் போல் நடந்து வந்து வெற்றி உரையை நிகழ்த்துவார். என் தாலி பாக்கியம் நிச்சயம் அதை நடத்திக்காட்டும். தொண்டர்களின் பிரார்த்தனை நிச்சயம் அதை நடத்திக்காட்டும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார். எனவே தொண்டர்கள் இப்போதே விழிப்புணர்வுடன் கட்சி பணியாற்ற வேண்டும் என உற்சாகமாக பேசினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சில கட்சிகள் நம்மை சாதி, மதத்தால் பிரிக்க முயல்கிறது. தமிழகத்தை வன்முறை பூமியாக மாற்ற நினைக்கின்றனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து குடியுரிமை பெறாமல் இருந்து கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்குத்தான் குடியுரிமை திருத்த சட்டம். இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் கட்சியாக களத்தில் நிற்பது தேமுதிகதான். டிக்-டாக் செயலியை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். அப்பாவி பெண்கள் டிக்-டாக் மூலம் சீரழிந்து வருகின்றனர். உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிக்-டாக் செயலியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.