2024 லோக்சபா தேர்தலுக்கான அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்தால் போதும் என்கிற முயற்சியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முன்னெடுக்கின்றனர்.
ஆனால் காங்கிரஸையும் மாநில கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கருத்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதே நிலைப்பாட்டில் இருக்கிறார்.தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸில் இணைவார் என்கிற பேச்சுகளும் எழுந்தன. இந்நிலையில் திடீரென தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் 2023 சட்டசபை தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் போட்டது.

இது காங்கிரஸில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவேலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரந்தீப் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரசாந்த் கிஷோர் பல்வேறு அறிக்கைகளை தந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு செயற்குழு ஒன்றை கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். அதில் முக்கிய பொறுப்புடன் இணைந்து கொள்ள சோனியா காந்தி அழைப்பு விடுத்தார்.
ஆனால், இதை பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார். அவரது முயற்சி மற்றும் யோசனைகளை கட்சி பாராட்டுகிறது என ட்வீட் செய்துள்ளார். ரந்தீப் சிங் பதிவைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பிரசாந்த் கிஷோரும் ட்வீட் செய்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி எனக்கு பெருந்தன்மையுடன் அளித்த தேர்தல் பொறுப்பை நான் வேண்டாம் என மறுத்துள்ளேன்.எனது தாழ்மையான எண்ணத்தின்படி, கட்சிக்கு எனது தேவையை விட, கட்டமைப்பு ரீதியாக ஆழமாக உள்ள பிரச்னைகளை சீர்திருத்த வலிமையான தலைமை தான் தேவை என கருதுகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிலையில் பிரசாந் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையாதது ஏன்? என்பது தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது பிரசாந்த் கிஷோர், சந்திர சேகர் ராவுடன் தெலுங்கானா தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்தார். இது காங்கிரசில் உள்ள பல தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்தது.

மேலும் தேர்தலில் வெற்றி பெற்றால் அது பிரசாந்த் கிஷோரின் வெற்றியாக கருதப்படும். இதனால் அவர் இணைவது சரியாக இருக்காது என்று மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தலைமை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் சில மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பிரதமர் வேட்பாளர், காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற 2 பேரை கொண்டு வர பிரசாந்த் கிஷோர் விரும்பினார். அதற்காக அவர் பிரியங்காவை காங்கிரஸ் கட்சி தலைவராக்க விரும்பினார். ஆனால் மேலிடமோ ராகுல் காந்தியை தான் மீண்டும் தலைவராக்குவது என்று விரும்பியது.
பிரசாந்த் கிஷோரின் இந்த யோசனையை காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்பவில்லை. மேலும் பீகார், மராட்டியம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட்டணி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தையும் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் தனக்கு உயர் அதிகாரம் கொண்ட பதவி வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநில தேர்தல்களின்போது முடிவு எடுக்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையும் காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை.
