பாமக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான அரசு அகற்றப்படும் என பாமக உறுதிபூண்டுள்ளது. 

PMK general body meeting resolutions : பாமகவில் உட்கட்சி மோதல் காரணமாக அன்புமணி பாமக- ராமதாஸ் பாமக என இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. இந்த நிலையில் அன்புமணி தலைமையிலனா பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினராலும் வெறுக்கப்படும் கொடுங்கோல் திமுக அரசை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்த பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி என்றால் அது தற்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி தான் என்பதே அனைத்துத் தரப்பினரின் பொதுக்கருத்தாக உள்ளது. அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் திமுக அரசால் அனைத்து வகைகளிலும் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியை வீழ்த்த தீர்மானம்

மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அரசு அகற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும். அதற்காக திண்ணைப் பரப்புரை, சமூக ஊடக பரப்புரை, மக்கள் சந்திப்பு இயக்கங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் கடுமையாக பாடுபடுவதற்கு பாமக பொதுக்குழு கூட்டம் உறுதியேற்றுக் கொள்கிறது.

தீர்மானங்கள்

01 : பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பொதுச் செயலாளராக ச. வடிவேல் ராவணன் அவர்களும், பொருளாளராக ம.திலகபாமா அவர்களும் பொதுக் குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் மீது பாட்டாளி மக்கள் கட்சி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதி எண் 26.2&ன்படி, “கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொதுத் தேர்தல்கள் இயல்பாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்”. ஆனால், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், அனைத்து நிலை நிர்வாகிகளும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வதில் தான் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், பாமக உட்கட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இதைக் கருத்தில் கொண்டும், கடந்தகாலங்களில் உள்கட்சித் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று தாமதமாக நடத்தப்பட்ட நிகழ்வுகளை முன்னுதாரணமாகக் கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்த மேலும் ஓராண்டு காலக்கெடு வழங்குவது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், பொதுச் செயலாளர் பதவியில் ச.வடிவேல் இராவணன் அவர்களும், பொருளாளர் பதவியில் ம.திலகபாமா அவர்களும் தொடர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.

02 : வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்

03 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

04 : சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்

05 : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.

06 : பெண்கள் பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம்

07 : தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

08 : தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.

09 : தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்

10 : தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

11 : தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.

12 : காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!

13 : தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

14 : அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

15 : அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

16: மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்

17 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

18 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.