Asianet News TamilAsianet News Tamil

ரயில்வே துறையில் பணியிடங்கள் ரத்து? அலறி துடிக்கும் ராமதாஸ்...

ரயில்வே துறையில் செலவுக்குறைப்பு என்ற பெயரில் பணியிடங்களை ரத்து செய்யும் முடிவை மத்தியர அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

PMK founder Ramdas urges govt to scrap plan to abolish jobs in railways
Author
Tamil Nadu, First Published Apr 26, 2022, 10:26 AM IST

பணியிடங்கள் ரத்து செய்ய திட்டம்

ரயில்வே துறையில் முக்கியம் இல்லாத பணிகளை ரத்து செய்வது என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தொடர்வண்டித் துறையில் முக்கியம் இல்லாத பணிகளில் இருப்பவர்கள் அனைவரையும், அத்தியாவசியமான பணிகளில் மறு நியமனம் செய்து விட்டு, அவர்கள் ஏற்கனவே இருந்த பணியிடங்கள் அனைத்தையும் ரத்து செய்ய இந்திய ரயில்வே வாரியம் ஆணையிட்டிருக்கிறது. இதனால், ரயில்வேத் துறையில் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து உருவாகியிருக்கிறது. இந்திய தொடர்வண்டி வாரியத்தின் தலைவர் வினய்குமார் திரிபாதி, அனைத்து மண்டல தொடர்வண்டித் துறை பொது மேலாளர்களுக்கும் எழுதியுள்ள ஏப்ரல் 18-ஆம் தேதியிட்ட கடிதத்தில், தொடர்வண்டித் துறையில் தட்டச்சர்கள், சுகாதார உதவியாளர், தச்சர், பெயிண்டர், உதவியாளர், உதவி சமையலர், தோட்டக்காரர், பராமரிப்பாளர்கள், உணவு விற்பனையாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் அனைவரையும் வேறு பணிக்கு மாற்றவும், இப்பணியிடங்கள் அனைத்தும் முக்கியமற்றவை என்பதால் அவற்றை உடனடியாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.பணியிட மாற்றம் செய்யப்படும் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த அதே ஊதியம் வழங்கப்படும்; பணிப்பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இந்திய ரயில்வே வாரியம் அறிவித்திருக்கிறது. அதனால், இப்போது பணியில் உள்ள எவரும் உடனடியாக வேலை இழக்க மாட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால், ரயில்வேத் துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் குறையும்; இது இளைஞர்களை பாதிக்கும். உலகிலேயே மிக அதிக பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. இந்திய ரயில்வேயில் 14 லட்சம் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 1.49 லட்சம் தொடக்க நிலை பணியிடங்கள் காலியாக இருப்பதாக தொடர்வண்டித்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

PMK founder Ramdas urges govt to scrap plan to abolish jobs in railways

தனியாருக்கு தாரை வார்ப்பு

அந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை செய்ய முன்வராத ரயில்வே  வாரியம், இருக்கும் பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ரயில்வேத் துறையில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதற்காக  தொடர்வண்டித்துறை தரப்பில் கூறப்படும் காரணம் நிதிப்பற்றாக்குறை தான். இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வருமானத்தில் 67% ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுவதாகவும், செலவைக் குறைக்க முக்கியத்துவம் அற்ற பணிகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த வாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரயில்வேத் துறையில் முக்கியம் இல்லாத பணியிடங்கள் மட்டுமே ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஆகும். ரயில்வேத் துறையில் முக்கியத்துவம் இல்லாத பணிகள் என்று எதுவும் கிடையாது. மாறாக, பல பணிகள் முக்கியத்துவம் அற்றவையாக மாற்றப்பட்டு விட்டன என்பது தான் உண்மையாகும். இந்திய ரயில்வேத் துறையில் உணவு வழங்கல்,  தொடர்வண்டி மற்றும் தொடர்வண்டி நிலைய பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு விட்டன. தொடர்வண்டித்துறையே சில பணிகளை தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, அப்பணிகளை செய்தவர்களை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டு, அப்பணியிடங்களை ரத்து செய்வது நியாயமல்ல.

PMK founder Ramdas urges govt to scrap plan to abolish jobs in railways

ரத்து செய்யும் முடிவை கை விட வேண்டும்

தொடர்வண்டித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் மயமாக்கலை கைவிட்டு, அந்த சேவைகளை சொந்த பணியாளர்களைக் கொண்டு மேம்படுத்தினால்,  தொடர்வண்டித் துறையின் வருவாய் அதிகரிக்கும். அதை செய்ய வேண்டிய தொடர்வண்டித்துறை, அந்த சேவைகளை எல்லாம் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அதற்கான பணியிடங்களை ரத்து செய்வது தவறு ஆகும். இந்தியாவில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன. அதனால், வேலைவாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களையே இளைஞர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சமூகநீதி நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை என்பதால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. இத்தகைய சூழலில் தொடர்வண்டித்துறையில் பணியிடங்களை ரத்து செய்வது நிலைமையை மோசமாக்கும். எனவே, தொடர்வண்டித் துறையில் பணியிடங்களை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். தொடர்வண்டித்துறையில் காலியாக உள்ள அனைத்து நிலை பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

இதையும் படியுங்கள்

ஆளுநர் மாளிகையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்...! கவர்னருக்கு கிரீன்வேஸ் சாலையில் வீடு..!-வி.சி.க

Follow Us:
Download App:
  • android
  • ios