ஆளுநர் மாளிகையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்...! கவர்னருக்கு கிரீன்வேஸ் சாலையில் வீடு..!-வி.சி.க
சென்னையின் முக்கிய இடமான கிண்டியில் தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட மாளிகையை மாற்றி விட்டு, கிரின்வேஸ் சாலையில் ஆளுநருக்கு வீடு ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பயன்பாட்டில் ஆளுநர் மாளிகை ?
நீட் விலக்கு மசோதா காரணமாக தமிழக அரசிற்கும்- ஆளுநருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆளுநர் விருந்து நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார். சிதம்பரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு ஆளுநர் இல்லம் 166 ஏக்கர் 84 செண்ட் கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடைபெறும் சட்டப்பேரவை வளாகத்தை விட பல மடங்கு அதிகம். ஒரே நபர் அல்லது அவர் சார்ந்த குடும்பத்தினர் இந்த இல்லத்தில் வசித்து வருகின்றனர். இது மக்களாட்சிக்கு எதிரானது. எனவே ஆளுநரை கிண்டியில் உள்ள ஆளுநர் இல்லத்தில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கான சிறப்பு சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே அரசு இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகி வன்னி அரசு ஏற்கனவே கூறியுருந்தார். இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பான சட்மன்ற உறுப்பினர் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார்.
துணை வேந்தர் நியமிப்பதில் தனிப்பட்ட உரிமை
தமிழக சட்டப்பேரவையில் மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த சட்டமுன்வடிவிற்கு அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்து ஆலோசித்து ஆளுநர் துணைவேந்தரை நியமிப்பது மரபாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநர் தனக்கு தனிப்பட்ட முறையில் உரிமை உள்ளது போல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் அதன்கீழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நீக்க முடியவில்லை என்பது ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்து இருந்தார்.
கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு வீடு..!
இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற கட்சி தலைவர் சிந்தனை செல்வன் பேசுகையில், ஆளுநர் நியமனம் மசோதா தொடர்ந்து தங்கள் கட்சி சார்பாக வலியுறுத்தப்பட்டு வந்ததாக தெரிவித்தார். தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்க்க தக்கது என கூறினார். இந்த பிரச்சனை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலானது என்பதை விட ஜனநயகத்திற்கும், காலனி ஆதிக்கத்திற்கும் இடையிலானது என்று பார்க்கவேண்டும் என கூறினார். மேலும் ஆளுநர் இருக்க கூடிய ராஜ்பவனை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அமைச்சர்கள் இருக்கக்கூடிய கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு ஒரு குடியிருப்பை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.