விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்களே சாட்சியம்.. கேராளவில் பிரதமர் மோடி பேச்சு..
மிக விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் சுற்றுபயணமாக தென்மாநிலங்களுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை கேரளா சென்றுள்ளார். கொச்சி விமான நிலையத்தில் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தலைமையில் மலர்களை தூவி பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குருப்பந்தாரா-கோட்டயம்-சிங்கவனம் ஆகிய பகுதிகளை இணைக்கும் 27 கிமீ இரட்டைப் இரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்பு, அங்கிருந்து கார் மூலமாக சென்று பாஜகவின் பொது மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் தனது உரையை மலையாளத்தில் தொடங்கினார்.மேலும் ஓணம் பண்டிகையை சிறப்பாக மக்கள் கொண்டாடி கொண்டு வரும் இந்த வேளையில் நானும் கேரளா வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அன்பு நிறைந்த கேரள மக்களுக்கு எனது மனம் கனிந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் படிக்க:ஸ்டாலின் போட்ட ரூட்டில் ஆளுநருக்கு ஆப்பு அடித்த கேரளா.. அச்சு பிசகாமல் வச்சு செஞ்ச பினராயி விஜயன்..
மேலும் பேசிய அவர், பாஜகவின் தேவையை கேரளா மாநில மக்கள் நன்கு உணர்ந்து வருகின்றனர். மேலும் நாடு பல்வேறு துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கான கட்டமைப்பு வலுப்படுத்தவும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
அனைத்து மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்தார். நாட்டில் மிக விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் எடுத்துக்காட்டாகவும் சாட்சியங்களாகவும் உள்ளன என்றார். மேலும் கேரளாவிற்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான மத்திய அரசு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்துள்ளதாக பேசினார்.
மேலும் படிக்க:அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு.. வெல்லப்போவது யார்..? உச்சகட்ட அலர்டில் ஓபிஎஸ்- இபிஎஸ்
கேரளாவில் ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைவருக்கும் தரமான வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க மத்திய அரசு உழைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தீர்மானத்தின்படி தற்போது அரசு பணியாற்றி வருகிறது என்று உரையாற்றினார்.
கடுமையான உழைப்பாளிகள் இருக்கும் மாநிலமான கேரளா, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியே லட்சியமாக கொண்டு மத்தியில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இது மக்களுக்கான அரசு என்றும் இது உங்களுக்கான அரசு என்றும் அவர் பேசினார்.
மேலும் படிக்க:கார்த்தி சிதம்பரம் அண்ணாமலை சிரித்தபடி செல்பி.. காங் தொண்டர்களை கதிகலங்க வைக்கும் போட்டோ.. என்னங்க நடக்குது.??
முன்னதாக அரசு விழாவில் கலந்துக்கொண்டு கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் கொல்லம்-புனலூர் இடையே சிறப்பு ரயில் சேவையை தொடங்கி வைத்த அவர், ரூ.76 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கொல்லம்-புனலூர் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட பகுதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முன்னதாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமத்திற்கு சென்ற பிரதமர், ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்தார்.