ஸ்டாலின் போட்ட ரூட்டில் ஆளுநருக்கு ஆப்பு அடித்த கேரளா.. அச்சு பிசகாமல் வச்சு செஞ்ச பினராயி விஜயன்..
தமிழக அரசு இனி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் என மசோதா நிறைவேற்றியுள்ள நிலையில், அதையொற்றி கேரளா அரசும் அதேபோன்ற மசோதாவை அங்கு நிறைவேற்றி உள்ளது.
தமிழக அரசு இனி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் என மசோதா நிறைவேற்றியுள்ள நிலையில், அதையொற்றி கேரளா அரசும் அதேபோன்ற மசோதாவை அங்கு நிறைவேற்றி உள்ளது.
ஆளுநரின் நடவடிக்கைக்கு கடிவாளம் போட முதலமைச்சர் ஸ்டாலின் இந்நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கேரளா முதலமைச்சரும் அம்மாநில ஆளுநருக்கு பாடம் புகட்ட இதேநடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். ஸ்டாலின் போட்ட ரூட்டில் கேரளா வண்டி ஒட்டுகிறது என்று பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் , பாஜக அல்லாத முதல்வர்களுக்கு ஆளுநர்கள் மூலம் பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. இதன் விளைவாக சில மாநிலங்களில் ஆட்சி நிர்வாகம் செய்ய முடியாத நிலைக்கு அம்மாநில முதல்வர்கள் தள்ளப்படும் நிலை இருந்து வருகிறது, இன்னும் சில மாநிலங்களில் வம்பெதற்கு என ஆளுநர்களுடன் கைகோர்த்து ஆட்சியை பகிர்ந்து கொள்ளும் நிலையும் உள்ளது.
ஆனால் ஒத்துவராத மாநிலங்களில் ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. மாநில அரசின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, மாநில அரசின் கோப்புகளை கிடப்பில் போடுவது போன்ற கெடுபிடிகளில் ஆளுநர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வரிசையில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என் ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கு பல்வேறு வகையில் வெளிப்படையாகவே நெருக்கடி கொடுத்து வருகிறார், மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை கூட குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார்.
இன்னும் பல நேரங்களில் இந்துத்துவ சித்தாந்தங்களை தூக்கி பிடிக்கும் வகையில், மேடைகளில் பகிரங்கமாக அரசியல் பேசி வருகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்துத்துவா, ஆன்மீகம் அரசியல் பேசிகிறார், ஆளாநரின் இந்த மரபுமீறிய செயல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் எதையும் பொருட்படுத்தாத ஆளுநர், எப்படியாவது தமிழகத்தில் பாஜகவை நிலைநிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவுக்கு இணையாக செயல்பாட்டு வருகிறார். இதேபோல் மாநில அரசுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் தன்னிச்சையாக நடத்தினார்.
இது மாநில அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை விரும்பாத மாநில அரசு, சட்டமன்றத்தைக் கூட்டி முதல்வரே இனி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பார் என்றும், இனி முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருப்பார் என்றும் மசோதா நிறைவேற்றியுள்ளது. வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கியுள்ளது. தற்போது இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து துணை வேந்தர்கள் மாநாடு தமிழக முதலமைச்சர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது, மாநில அரசின் உத்தரவின்படிதான் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும் என்றும், ஆளுநரின் உத்தரவுகளை மாநில அரசிடம் பரிசீலிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் ஸ்டாலின் துணை வேந்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல ஆளுநர்களின் கெடுபிடி என்பது கேரளாவிலும் இருந்து வருகிறது, ஆர்.என் ரவியை போலவே கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார், அவர் அம்மாநில வரலாறுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை கூறி வருவது, மற்றும் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை விமர்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார், இந்நிலையில்தான் தமிழக அரசைபோல பல்கலைகழக துணைவேந்தர்களே மாநில அரசே நியமிக்கலாம் என்ற ஆயுதத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கையில் எடுத்துள்ளார்.
ஆளுநர் ஆரிப் முகமது கானின் நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டும் வகையில் கேரளா அரசும் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி மாநில அரசை நியமிக்கும் என்ற மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் ஆளுநரின் அனுமதி இன்றி மாநில அரசு வேந்தர்களை நியமனம் செய்ய முடியும், அதேபோல் பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரே செயல்படுவார் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திமுக அரசு கொண்டு வந்த மசோதாவை காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இங்கு வரவேற்றன, ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு கொண்டுவந்துள்ள மசோதாவுக்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.