நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்-இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்
ஜெயலலிதா தான் நிரந்திர பொதுச்செயலாளர் என்ற சட்ட விதியை மாற்றி போலி பொதுச்செயலாளராக பழனிச்சாமி என்கிற நரி இந்த பதவியை கபலிகரம் செய்துள்ளார் என ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
அதிமுகவை கபலிகரம் செய்த இபிஎஸ்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், தேனியில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் மாநில மாநாடு போல் கூட்டம் நிரம்பி இருக்கிறது. எம்ஜிஆர், அம்மா காலத்தில் இருந்த கூட்டம் போல் இங்கு தொண்டர்கள் ஒருங்கிணைந்து வந்துள்ளனர்.
மூன்றாவது முறையாக சின்னமா தான் என்னை முதலமைச்சராக்கினார். பதவியை பெற்று தந்த சசிகலா, டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்த பழனிசாமியை அரசியலை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் அமமுக ஆரம்பித்தார். ஜெயலலிதா தான் நிரந்திர பொதுச்செயலாளர் என்ற சட்ட விதியை மாற்றி போலி பொதுச்செயலாளராக பழனிச்சாமி என்கிற நரி இந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கபலிகரம் செய்துள்ளார்.
தேனியின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன்
இந்த நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் நிற்க வைக்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள். பழனிச்சாமி இல்லாத அதிமுக மீட்டு மீண்டும் அதிமுக தொண்டர்களிடம் பெற்று தருவோம். நான் ஆரம்பித்தது தர்ம யுத்தம் நீங்கள்(டிடிவி தினகரன்) ஆரம்பித்தது "தர்ம போர்" என்று பேசினார். முன்னதாக கூட்டத்தில் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கூறுகையில், தேனி மாவட்டத்தோட செல்லப்பிள்ளை நமது டிடிவி தினகரன் என கூறினார்.
அதிமுகவிற்கு விசுவாசத்தின் அடையாளமாக இருந்தவர் ஓபிஎஸ், துரோகத்துக்கு அடையாளமாக இருந்தவர் இபிஎஸ் அவரை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அன்று டிடிவி சார் இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருக்க முடியாது என ரவீந்திரநாத் பேசினார்.
இதையும் படியுங்கள்