அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் நாளை மேல் முறையீடு செய்ய உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு- நீதிமன்றம் தீர்ப்பு
ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை இபிஎஸ் அணியினர் நிராகரித்து விட்டனர். உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இரண்டு நீதிபதி கொண்ட அமர்வில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒற்றை நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லையென்று தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என கூறப்பட்டது.

மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ்
மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்டவேண்டும் என்ற உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் ஜூன் 23க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அணி உற்சாகம் அடைந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து நாளையதினம் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணியினர் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் ஒற்றை வார்த்தை டுவீட் ஒற்றுமை ..! ஆர்.பி.உதயகுமார் கொடுத்த பதிலடி

இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பின் கருத்தைக் கேட்ட பின்பே தீர்ப்பளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பாக தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாகவும் எப்போது விசாரணை நடத்துவது என்பது தொடர்பாகவும் நாளைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு அறிவிப்பர்கள் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
