தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ தனியார்‌ பணியிடங்களில்‌ 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்‌ என்று நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரிலேயே தனிச்சட்டம்‌ நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ தனியார்‌ பணியிடங்களில்‌ 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்‌ என்று நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரிலேயே தனிச்சட்டம்‌ நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்‌ உள்ள மத்திய அரசுப்‌ பணியிடங்களில்‌ போலிச்சான்றிதழ்‌ கொடுத்து 300க்கும்‌ மேற்பட்ட வடமாநிலத்தவர்‌ வேலைக்குச்‌ சேர்ந்திருப்பது கடும்‌ அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில்‌ தமிழர்களது வேலைவாய்ப்புகளைத்‌ தொடர்ந்து பறித்துவரும்‌ வட மாநிலத்தவர்களின்‌ மேலாதிக்கத்தைத்‌ தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும்‌ திராவிட அரசுகளின்‌ அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம்‌, பாரத மின்மிகு நிறுவனம்‌, துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய்‌ சுத்திகரிப்பு
நிலையங்கள்‌, உள்ளிட்ட பல்வேறு பொது நிறுவனங்களில்‌ 95 விழுக்காட்டிற்கு மேல்‌ வடவர்களால்‌ நிரப்பப்பட்டுப்‌ பல்லாண்டு காலமாகவே தமிழர்களுக்கு நியாயமாகக்‌ கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள்‌ பறிக்கப்பட்டு வருகிறது. பொது நிறுவனங்களில்‌ உயர்‌ பதவிகளில்‌ இருப்பவர்கள்‌ பெரும்பாலும்‌ வட மாநிலத்தவர்கள்‌ என்பதால்‌ இந்தி பேசும்‌ மாநிலத்தவரை வேலையில்‌ அமர்த்தும்‌ பணியை மறைமுகமாகச்‌ செய்கின்றனர்‌ என்பதே எதார்த்தம். 

தமிழ்நாட்டிலிருந்த பொதுத்துறை நிறுவனங்களில்‌ நிலவிய வடவர்களின்‌ ஆதிக்கம்‌, நிர்வாகத்துறையிலும்‌ முறைகேடாகப்‌ பணியில் அமரும்படி பெருமளவுக்கு விரிவடைந்துள்ளது. தமிழகத்தில்‌ உள்ள அரசு நிறுவனங்களில்‌ பணிக்குச்‌ சேர்பவர்கள்‌ தமிழ்மொழி பாடத்தில்‌ தேர்வெழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம்‌ என்று அரசு உத்தரவிருக்கிறது. ஆனால்‌ இவ்விதி முறையாகக்‌ கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது முறையாகக்‌ கண்காணிக்கப்படுவதில்லை. மேற்கு வங்க மாநிலத்தில்‌ வங்க மொழியில்‌, பேசவும்‌, எழுதவும்‌, படிக்கவும்‌ தெரிந்தவர்கள்‌ மட்டுமே அம்மாநில அரசுப்‌ பணியில்‌ சேர முடியும்‌ என்ற சட்டம்‌ உள்ளதோடு, குழு அமைக்கப்பட்டு தீவிரமாகக்‌ கண்காணிக்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில்‌, தமிழர்களின்‌ அரசியல்,‌ அதிகாரம்‌, வணிகம்‌, பொருளாதாரம்,‌ பெருமளவு தமிழர்‌ அல்லாதவர்களே கைப்பற்றியுள்ள நிலையில்‌, அனைத்து விதமான வேலை வாய்ப்புகளையும்‌ வடவர்களிடம்‌ பறிகொடுத்தால்‌ தமிழர்கள்‌ சொந்த மண்ணிலேயே அதிகாரமற்ற ஏதிலிகளாகவும்‌, நிலமற்ற கூலிகளாகவும்‌ மாற்றப்படும்‌ நாள்‌ வெகுதொலைவில்‌ இல்லை. வேலை வாய்ப்பில்‌ அந்தந்த மாநிலங்களைச்‌ சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்‌ என்று குஜராத்‌, மத்தியப்பிரதேசம்‌, தரகண்ட்‌, மிசோரம்‌, சிக்கிம்‌, மணிப்பூர்‌, கர்நாடகம்‌ உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள்‌ தனிச்சட்டமே இயற்றியுள்ளன. 

அதுபோன்று தனியார்த்‌ துறைகளில்‌ 80 விழுக்காடு அளவுக்கு மண்ணின்‌ மைந்தர்களுக்குப்‌ பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென்று கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள்‌ சட்டமியற்றியுள்ளன. ஆகவே, திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு தமிழர்களது பணிவாய்ப்புகள்‌ வடவர்களிடம்‌ பறிபோவதை உடனடியாகத்‌ தடுத்து நிறுத்த தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ தனியார்‌ பணியிடங்களில்‌ 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்‌ என்று நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரிலேயே தனிச்சட்டம்‌ நிறைவேற்ற வேண்டும். 

மேலும்‌, போலிச்சான்றிதழ்‌ கொடுத்து மத்திய அரசுப்‌ பணியில்‌ சேர்ந்த 300 வடமாநிலத்தவரை உடனடியாகப்‌ பணிநீக்கம்‌ செய்ய மத்திய அரசிற்கு உரிய அழுத்தம்‌ கொடுக்க வேண்டுமெனவும்‌, முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில்‌ தொடர்புடைய அனைவருக்கும்‌ சட்டத்தின்‌ மூலம்‌ உரிய தண்டனைக்‌ கிடைக்க வழிவகைச்‌ செய்ய வேண்டுமெனவும்‌ தமிழ்நாடு அரசினை வலியுறுத்துவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்