அதிமுகவுக்கு புதிய சிக்கல்.. உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திடுவது யார்.? குழப்பத்தில் ர.ரக்கள்!
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் படிவங்களில் யார் கையெழுத்திடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சியில் 2 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கும்; நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2 மாநகராட்சி வார்டு கவுன்சிலர், 2 நகராட்சி வார்டு கவுன்சிலர், 8 பேரூராட்சி வார்டு கவுன்சிலர் என ஒட்டுமொத்தமாக 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 20- ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நாளைதான் கடைசிநாள் ஆகும்.
நாளை மாலைக்குள் வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்களுக்கான தேர்தல் தவிர்த்து மற்ற பதவிகளுக்கு கட்சி அடிப்படையில்தான் தேர்தல் நடைபெறும். இரு பதவிகளை தவிர்த்து மற்ற பதவிகளுக்கு கட்சியின் சின்னங்களில் போட்டியிடலாம். கட்சி சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அக்கட்சியின் சின்னங்களை ஒதுக்கும். அதற்கு அந்த வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்து இட வேண்டும்.
இதையும் படிங்க: இன்று நடைபெறும் அதிமுக கூட்டம் சட்டப்படி செல்லாது.. ஒரே அறிக்கையில் இபிஎஸ் முகாமை அலறவிடும் ஓபிஎஸ்..!
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியில் ஜெயலலிதா இருந்தவரை இந்தப் படிவங்களில் அவர்தான் கையெழுத்திடுவார். 2016-இல் உடல் நலன் குன்றி அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில், அவர் கையெழுத்து போட முடியாத சூழலில் கை நாட்டு வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுச்செயலாளருக்குரிய அதிகாரங்களும் இப்பதவிகளுக்கு மாற்றப்பட்டன. எனவே, தேர்தல்களில் ஏ மற்றும் பி படிவங்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டு வருகின்றனர்.
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க இபிஎஸ் சகல அஸ்திரங்களையும் ஏவி வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் இருந்தே ஓபிஎஸ் வெளியேறும் நிலைக்கு இபிஎஸ் தரப்பு நடந்துகொண்டதால், கட்சியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டதாகவும் தற்போது சலக அதிகாரங்களும் அவைத் தலைவருக்கு மட்டுமே இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்தப் படிவங்களில் யார் கையெழுத்திடுவார்கள் என்ற கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு மட்டுமா.? தமிழகத்துக்கும் இபிஎஸ்தான் தலைமையேற்க வேண்டும்.. பொளந்துகட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்!
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் இன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ள நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, இந்த இடைத்தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் விஷயத்திலும் ஓபிஎஸ் இதே நிலைப்பாட்டில்தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சின்னங்களை ஒதுக்க உதவும் ஏ மற்றும் பி படிங்களை அதிமுக வேட்பாளர்கள் எப்படி சமர்பிப்பார்கள் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எப்படி இருந்த கட்சி.. என் கண் முன்னால் அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? மனவேதனையில் துடிக்கும் கி. வீரமணி!