பாதுகாப்பு அமைச்சருக்கு இதுபோன்ற விஷயங்கள் குறித்து முழுமையான அறிவு இல்லை என்று நான் நம்புகிறேன். பாரதிய ஜனதா கட்சி வரலாற்று உண்மைகளை எவ்வாறு முன்வைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நாடு முழுவதும் இதைப் புரிந்துகொள்கிறது

பாபர் மசூதியைக் கட்ட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பொது நிதியை கொடுக்க முயன்றதாக கூறிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக பதிலளித்துள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையான தாக்குதலைத் முன் வைத்தார். அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்ட பொது நிதியைப் பயன்படுத்த நேரு ஒரு காலத்தில் முன்மொழிந்தார். இந்த திட்டத்தை சர்தார் வல்லபாய் படேல் கடுமையாக எதிர்த்தார் எனக் கூறியிருந்தார்.

ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சுக்குபதிலளித்த காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி, "ராஜ்நாத் சிங் எங்கிருந்து இந்த தகவலைப் பெற்றார்? அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர். அவர் முதலமைச்சராக இருந்துள்ளார். அவர் ஒரு தீவிர அரசியல் நபராகக் கருதப்படுகிறார். மோடியைப் போன்ற ஒருவர் அல்ல. எனவே, அவர் இதுபோன்ற பேச்சை பேசும்போதெல்லாம், குறிப்பாக ஒரு வரலாற்று சூழலில், அவற்றை ஆதரிக்கும் உண்மை ஆதாரங்கள் அவரிடம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் கண்ணியம் அவருக்கு இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, "தனது சொந்த வசதிக்கு ஏற்ப வரலாற்றைத் திரிப்பதற்குப் பதிலாக, நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ராஜ்நாத் சிங் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

ராஜ்நாத் சிங்கின் பேச்சு குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ் கூறுகையில், "ராஜ்நாத் சிங் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர். அவர் நமது ராணுவம் மற்றும் வீரர்களுக்கு பிற வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு அமைச்சருக்கு இதுபோன்ற விஷயங்கள் குறித்து முழுமையான அறிவு இல்லை என்று நான் நம்புகிறேன். பாரதிய ஜனதா கட்சி வரலாற்று உண்மைகளை எவ்வாறு முன்வைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நாடு முழுவதும் இதைப் புரிந்துகொள்கிறது என்று நான் நினைக்கிறேன்" என விமர்சித்துள்ளார்.

நேற்று வதோதரா அருகே உள்ள சாத்லி கிராமத்தில் சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஏக்தா அணிவகுப்பு' நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ‘‘எந்தவொரு மதத் தளத்தையும் கட்டுவதற்கு அரசாங்கப் பணத்தை செலவிடக்கூடாது என்று படேல் நம்பினார். அதனால் நேருவின் திட்டத்தைத் தடுத்தார். படேலின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவிடத்திற்காக பொதுமக்கள் சேகரித்த பணத்தை கிணறுகள், சாலைகள் கட்டுவதற்கு நேரு பரிந்துரைத்தார். கிணறுகள், சாலைகள் கட்டுவது அரசின் பொறுப்பு என்பதால் இது ஒரு 'விசித்திரமான' ஆலோசனை’’ எனத் தெரிவித்து இருந்தார்.