காதல் திருமணம் செய்த 9 மாதங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள் தற்கொலை! இது தான் காரணமா?
ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடுவின் மகள் மாதுரி சஹிதிபாய், காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் ராஜேஷ் நாயுடு வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

காதல் திருமணம்
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மாதுரி சஹிதிபாய் (27). நந்தியால மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டாரின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
வரதட்சணை கொடுமை
திருமணமான சில மாதங்களிலேயே ராஜேஷ் நாயுடு வரதட்சணை கேட்டு மனைவி மாதுரி சஹிதிபாயை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக கணவர் தன்னை கொடூரமாகத் தாக்குவதாக அப்பெண் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்திருந்தார். பின்னர், உள்ளூர் காவல்துறை தலையிட்டு அப்பெண்ணை கணவர் வீட்டிலிருந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த பிறகு அப்பெண் மீண்டும் கணவர் வீட்டிற்குச் செல்லவில்லை
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை
இந்நிலையில், கணவன் தன்னை மீண்டும் அழைத்து செல்ல வரவில்லை என்று மனவேதனையில் மாதுரி தவித்து வந்துள்ளார். வாழ்ந்த வாழ்க்கை போதும் நினைத்த மாதுரி வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் வீட்டில் வேலை செய்தவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜேஷ் நாயுடுவிடம் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் நாயுடுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

