ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்-எம்.பி இடையே ஏற்பட்ட மோதல்.! சமரசம் செய்த அமைச்சர் - நடந்தது என்ன?
அரசு விழாவை தான் வருவதற்கு முன்பாக தொடங்கியது தொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி மற்றும் மாவட்ட ஆட்சியர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிய நவாஸ் கனியின் அலுவலக உதவியாளர் விஜயராமுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமைச்சர்- எம்பி மோதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் முதலமைச்சர் கோப்பை காண பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க மாவட்ட அமைச்சரான ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பார்கள் என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க மாவட்ட அமைச்சரான ராஜ கண்ணப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அங்கு வந்த நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான நவாஸ்கனி பங்கேற்பது குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணத்தால் விழா தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி விழாவிற்கு வந்துள்ளார்.
மோதல் ஏற்பட்டது ஏன்.?
விழா மேடைக்கு வந்தவர் நேராக மாவட்ட ஆட்சியரிடம் சென்று நான் வராமல் விழாவை தொடங்கியது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட மாவட்ட அமைச்சராக ராஜ கண்ணப்பன் சமாதானத்தில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் இதனை கேட்காத நவாஸ் கனி ஆவேசப்பட்டு பேசியுள்ளார். அப்போது அமைச்சர் கண்ணப்பன்,விடுங்கள் நடந்து விட்டது, இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இருந்த போதும் எம்பி கோவமாக பேசிக்கொண்டே இருந்துள்ளார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆதரவாளர்களுள் ஒருவர் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான நவாஸ் கனிக்கு பதிலாக திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்திக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ராஜீவ் காந்தி யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் செயல்படுவதாக நினைத்து பங்கேற்க வந்த அரசு நிகழ்ச்சியில் நவாஸ் கனி கோபத்தை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
எம்பியின் உதவியாளர் கைது
அரசு நிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சருடன் மோதல் போக்கை கடைபிடித்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட திமுகவிற்குள் கட்சி கோஷ்டி பூசலை மக்கள் மத்தியில் வெளிக்காட்டுவதாக காட்டுவதாக அமைந்துள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிய நவாஸ் கனியின் அலுவலக உதவியாளர் விஜயராமுவை போலீசார் கைது செய்துள்ளனர். 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
நவாஸ்கனி ஆதரவாளர் கைது
இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட மையம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை கைது செய்யகோரி நாளை மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திமுக எம்.பி - அமைச்சர் இடையே மோதல்.. மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டதால் பரபரப்பு.. வைரல் வீடியோ