ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி..! காரணம் இதுதான்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,309 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்து மரண அடி வாங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி மேனகா நவநீதன் மற்றும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் அமமுக போட்டியிடாமல் விலகியது. பாமக-வும் தேர்தலில் இருந்து விலகியதுடன், யாருக்கும் ஆதரவும் அளிக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளித்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!!
கடந்த பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலையில் இருந்துவந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,309 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளை பெற்ற நிலையில், 66575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அமமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடாததால், வளர்ந்துவரும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்கு சதவிகிதத்தை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் வெறும் 10804 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். தேமுதிகவும் டெபாசிட்டை இழந்தது.
மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெறாத வேட்பாளர் டெபாசிட்டை இழப்பார். அந்தவகையில் 10804 வாக்குகளை மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது. கடந்த தேர்தலில் இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் 11629 வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி இம்முறை 825 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகத்தை பற்றி பேசியது அச்சமூக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீமானின் அந்த சர்ச்சை பேச்சு தான் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை கூட பெற முடியாத அளவிற்கு தோற்க காரணமாக அமைந்துவிட்டது. சீமானின் பேச்சு தான் அவரது பலமே. அவரது பலமே இந்த இடைத்தேர்தலில் அந்த கட்சி மரண அடி வாங்க காரணமாகிவிட்டது.