இந்திய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!!
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு வழங்கிய தீர்ப்பில், நியாயமாக தேர்தல்கள் நடைபெற தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை.
இதையும் படிங்க: இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் - மு.க. ஸ்டாலின் உறுதி!
சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்காத தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகம் மக்களின் சக்தியுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டின் வலிமை மிக உயர்ந்தது, மிகவும் சக்திவாய்ந்த கட்சிகளை வீழ்த்தும் திறன் கொண்டது. சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படுவது போல் தலைமை தேர்தல் ஆணையரும் தேர்வு செய்யப்பட வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும். தலைமைச் தேர்தல் ஆணையரையும் இந்தக் குழுவே தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதைப் போலவே பதவி நீக்கம் செய்யும் முறையும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் இபிஎஸ்க்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்!நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்-மு.க.ஸ்டாலின் அதிரடி
இதன் மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தன்னாட்சி அமைப்புகள் கொள்ளையடிக்கப்படும்போது, உச்சநீதிமன்றத்தின், இந்த சரியான நேரத்தில் தலையீடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முக்கியமானது. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான செயல்பாடு ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.