இன்று மாலை டெல்லி செல்லவுள்ள தமிழக அமைச்சர் உதயநிதி, நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். அப்போது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை புரட்டி போட்ட நிலையில்,வட மற்றும் தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு சார்பாக இதுவரை குறைவான அளவே நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று திருச்சி வந்த பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் சந்தித்து தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏன் உதயநிதி பிரதமரை சந்திக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது.



கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி

இது தொடர்பாக விளையாட்டுதுறை சார்பாக வெளியான தகவலில், இந்தியாவில் நீண்ட காலமாக கிரிக்கெட், ஹாக்கி மட்டுமே பிரபலமான விளையாட்டாக இருந்து வந்த நிலையில், மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பதக்கம் வெல்லும் திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இத்தகைய இளம் வீரர்களை கண்டறியும் நிகழ்வாகவே கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டு தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

மோடியை சந்திக்கும் உதயநிதி

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 2024 ஜன.19 முதல் ஜன.31 வரை நடைபெறும் கேலோ போட்டிகளில் 5 ஆயிரத்தும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து பிரதமர் மோடியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சந்திக்கவுள்ளார். இன்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர், நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை அளிக்கவுள்ளார். 

இதையும் படியுங்கள்

பொங்கல் பரிசு தொகைக்கான அறிவிப்பு வெளியிடாதது ஏன்.? அனைவருக்கும் 3 ஆயிரம் ரூபாயாக அறிவியுங்கள்- ஓபிஎஸ்