புலி வாலை பிடித்த போட்டோவை பார்த்து அசந்து போனேன்..! சட்டப்பேரவையில் செல்லூர் ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே ஆஹா ஓஹோ என்கின்றன என தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்த போட்டாவை பார்த்து அசந்து போனதாகவும் கூறினார்.
ஆஹா... ஓஹோ... என பாராட்டனும்
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவையின் வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுரை சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே ராஜூ கேள்வி எழுப்பினார்.அப்போது மதுரைக்கு எந்த ஒரு தொழிலும் இல்லை. மெட்ரோ ரயில் வேறு மதுரைக்கு வருகிறது என்று சொல்கிறார்கள். எந்த தொழிலும் இல்லாமல் மெட்ரோ ரயில் வந்து என்ன பிரயோஜனம்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசியவர், எல்லாரும் பாராட்டக்கூடிய அளவிற்கு விரைவில் மதுரைக்கு ஏதாவது ஒரு தொழில் முதலீடை அமைச்சர் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஆஹா... ஓஹோ... என அமைச்சர் தென்னரசை பாராட்டும் அளவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
மதுரையில் தொழில் முதலீடு
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, பத்து வருடமாக தமிழக அமைச்சராக இருந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். இந்த அமைச்சராவது தருகிறாரா என பார்ப்போம் என சிரித்துக்கொண்டே கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரையில் டைடல் பார்க், சிப்காட் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை தூத்துக்குடி தொழில் வழித்தடத்தில் வரிசையாக தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. சமச்சீரான தொழில் வளர்ச்சி எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
புலி வாலை பிடித்த செல்லூர் ராஜூ
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை (செல்லூர் கே. ராஜூ) பார்த்து ஆஹா ஓஹோ என்கின்றனர். கொஞ்ச நாளைக்கு முன்னாடி புலிவாலை பிடித்தபடி ஒரு படம் வந்தது. நானே அசந்து போனேன். மதுரைக்காரர்கள் விவரமாக இருப்பார்கள். ஆனால் புலி வாய் இருக்கும் பக்கம் நிற்காமல் புலி வால் இருந்த பக்கம் பிடித்திருந்தார் செல்லூர் ராஜி என நகைச்சுவையாக கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த பேச்சிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சிரித்தனர்.
இதையும் படியுங்கள்