தமிழ் மொழியை காப்பாற்றும் பாஜக! எல்லாமே பொய்.. அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விட்ட சவால் !
‘130 கோடி மக்கள் வாழுகின்ற இந்தியாவில் 22 ஆட்சி மொழிகள் இருக்க முடியுமா? என்று கேட்டால், 100 சதவீதம் இருக்க முடியும்’ என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘ஆளுநர் பதவி என்பது மாநிலங்களுக்கு உதவியாக, ஒத்தாசையாக இருக்க வேண்டும்.
மாநில அரசு இயற்றுகின்ற சட்டங்கள், சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். எனவே தான் அவர்களுக்கு முதல் குடிமகன் என்ற அந்தஸ்து நிலையை கொடுத்து இன்றைக்கு மாநிலங்களில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசியல் சாராதவர்களாக இருக்க வேண்டும். எங்களது கேள்வியெல்லாம் உயர்ந்த அந்த பதவியில் இருந்து கொண்டு அதன் மாண்பை, மரியாதையை கெடுக்கின்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது தான். தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது.
ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான அரசு சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக வரலாறு என்பது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான வரலாறு. ஒரு சனாதனத்தை கட்டமைக்க ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதை செய்வது தான் தர்மம் என்று பாஜக தலைவர் கூறுகிறார். தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் மொழியை காப்போம் என்று பாஜக போராட்டம் நடத்துவது ஒரு மாயை ஆகும்.
இதையும் படிங்க..தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!
நமது பிரதமர் சில இடங்களில் திருக்குறள் பேசுகிறார். எங்களது கோரிக்கை 22 மாநில மொழிகளை அரசியல் சட்டம் அங்கீகரித்து இருக்கிறது. 130 கோடி மக்கள் வாழுகின்ற இந்தியாவில் 22 ஆட்சி மொழிகள் இருக்க முடியுமா? என்று கேட்டால், 100 சதவீதம் இருக்க முடியும். சிங்கப்பூரில் சில லட்சம் மக்கள் தான் உள்ளார்கள். அங்கு 4 மொழிகள், ஆட்சி மொழியில் உள்ளது. எனவே தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. பாஜகவினர் கபட நாடகம் போடுகிறார்கள்.
அவர்களுக்கு திராணி இருந்தால் அவர்கள் உண்மையிலேயே தமிழ் மீது பற்று கொண்டவர்களாக இருந்தால், மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்கட்டும். என்ஐஏ என்பது தேசத்தில் உள்ள உச்ச கட்டமான ஒரு புலனாய்வு அமைப்பு. அந்த அமைப்பு மாநில அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும் அந்த அறிக்கை தனக்குத் தெரியும் என்றும் ஒருவர் பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால் மத்திய அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது தானே.
தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கை நகல் பாஜகவுக்கு அனுப்பப்படுகிறதா? குஜராத்தில் தற்போது நடைபெற்ற சம்பவத்தை போன்று மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு அங்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது பிரதமர் கூறிய போது, கடவுள் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசு இருப்பதை விரும்பவில்லை. அதற்கான அறிகுறிதான் இது என்றார். அப்படி என்றால் குஜராத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் குஜராத்தில் பாஜக அரசு இருக்கக்கூடாது என்பதற்கான அறிகுறி தானா ?
அதனை அவர் ஏற்றுக்கொள்வாரா ? ஆளுநர்கள் திட்டமிட்டு பாஜக அரசு இல்லாத மற்ற மாநிலங்களில் செயல்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதனை ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள் அத்தனை பேரும் கூறி வருகிறார்கள். எங்களுக்கு கவர்னரை கண்டு பயம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பை சிதைத்து விடக்கூடாது என்பது தான் திமு கவின் கரிசணை’ என்று பேசினார்.
இதையும் படிங்க..சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி
இதையும் படிங்க..ரோமானிய காலம் முதல் ஓவியங்கள் அடங்கிய பாலம் வரை.. உலகின் மிகவும் பிரபலமான 10 பாலங்கள் பற்றி தெரியுமா ?