‘மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவில் சமூக அநீதி இழைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அது சரி செய்யப்படவில்லை’ என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், ‘வணிகவரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத்துறையில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டு மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. துணை வட்டாட்சியர் பணியிடங்கள் முழுக்க முழுக்க மாறுதல் மூலமான நியமனம் வழியாக நிரப்பப்படுகின்றன. உதவியாளர் நிலையில் இருப்பவர்கள் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர்களாக நியமிக்கப்படும் போது, அவர்களுக்கு கூடுதல் ஊதியம், கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். 

இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத் தான் பார்க்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்பதால், இப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கூறினார்கள். இதே காரணத்தை முன்வைத்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு நிலையில் உள்ள அதிகாரிகள், அதிக ஊதியமும், கூடுதல் பொறுப்பும் கொண்ட அடுத்த நிலை பணிகளில் நியமிக்கப்பட்டால் அதை பதவி உயர்வாகவே கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 

அதனால் இத்தகைய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்வதில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கடந்த 2005-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என 2018-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக 2012-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட நியமனங்கள் அனைத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான எந்த இட ஒதுக்கீடும் பின்பற்றப் படாமல், பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டன. அதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவில் சமூக அநீதி இழைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அது சரி செய்யப்படவில்லை. 

நீதிமன்ற வழக்குகள் மூலம் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இந்த வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நிலையான பதவி உயர்வை வழங்கலாம் என்று ஒரு வழக்கிலும், இடைக்கால ஏற்பாடாக தற்காலிக பதவி உயர்வு வழங்கலாம் என்று இன்னொரு வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் 2020-இல் தீர்ப்பளித்திருந்தது. அதனடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 116 பேருக்கு இரண்டாம் நிலை சார்பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆணையும் வழங்காத நிலையில், 116 பேருக்கு வழங்கப்பட்டிருந்த பதவி உயர்வை பதிவுத்துறை தலைவர் கடந்த 01.12.2021 அன்று ரத்து செய்தார். 

இது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான ஒருதலைபட்சமான நடவடிக்கை ஆகும். இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2005-ஆம் ஆண்டு முதல் இழைக்கப்பட்டு வந்த சமூக அநீதியைப் போக்குவதற்கும், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கும் தடையாக இருந்த என். மகாலிங்கம் (எதிர்) தமிழ்நாடு அரசு வழக்கில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி நீதியரசர் பார்த்திபன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டார். 

அந்தத் தீர்ப்பு 2018-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்துவதற்கு எந்த தடையையும் விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, இந்த வழக்கை காரணம் காட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பணியாளர்களுக்கு நிரந்தரமான பதவி உயர்வு வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் இத்தீர்ப்பின் மூலம் அகன்று விட்டது. அதனால், 2005-ஆம் ஆண்டிலிருந்து சமூக அநீதியை சந்தித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனடி நீதி வழங்க முடியும். 

அதுமட்டுமின்றி, 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய இரண்டாம் நிலை சார்பதிவாளர் பட்டியலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பதிவுத்துறை தலைவர் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் அந்தப் பட்டியலை வெளியிட முடியும். ஆனால், தீர்ப்பு வெளியாகி 70 நாட்களுக்கு மேலாகியும் அப்பட்டியலை வெளியிடாமல் பதிவுத்துறை தலைவர் தாமதித்து வருகிறார். இது திமுக அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரான செயலாகும். இத்தகைய போக்கை மாற்றி எம்.பி.சி பணியாளர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது. 

அதை நிறைவேற்றும் வகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சார்பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையும் படிங்க : "இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டப்படுகிறது..அந்த நாடு உருப்படாது.. அன்றே சொன்ன ரஜினிகாந்த் - வைரல் வீடியோ !

இதையும் படிங்க : அன்று பாகுபலி பல்வாள் தேவனுக்கு நடந்தது.. இன்று ராஜபக்ச தந்தைக்கு - போராட்டக்காரர்கள் செய்த சம்பவம் !