சபாஷ் காம்ரேடுகள்…! சாமானிய தொண்டனுக்கு குடை பிடித்த தமிழக எம்எல்ஏ… வைரல் போட்டோ…
கொட்டும் மழையில் சாமானிய தொண்டனுக்கு கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒருவர் குடை பிடித்த சம்பவம் தமிழகத்தில் நடந்து… அந்த போட்டோவும் வைரலாகி இருக்கிறது.
கொட்டும் மழையில் சாமானிய தொண்டனுக்கு கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஒருவர் குடை பிடித்த சம்பவம் தமிழகத்தில் நடந்து… அந்த போட்டோவும் வைரலாகி இருக்கிறது.
அரசியல் களம் என்பது அசாதாரணமான ஒன்று. இங்கு உயர இருப்பவர்கள் திடீரென அதல பாதாளத்திலும், அதல பாதாளாத்தில் இருப்பவர் கோபுரத்திலும் உட்கார்ந்து கொள்வர். கண நேரத்தில் ஆட்சிகளும், காட்சிகளும் மாறும்.
கீழிருப்பவர்கள் மேலேயும், கீழே இருப்பவர்களும் மேலேயும் செல்வர். இதற்கு பல உதாரணங்களை கூற முடியும். இந்த உதாரணங்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகால அரசியலில் கண்ட காட்சிகள்.
அதற்கு முன்னதாக முதலமைச்சராக இருந்த காமராஜர்… சைக்கிளில் லாந்தரை விளக்கை பிடித்துக் கொண்டு பிரச்சார களத்தில் சென்ற வரலாற்று நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. தொண்டனும், தலைவனும் ஒன்றே என்ற சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை.
ஆனால்.. நடப்பு அரசியல் களம் என்பது வேறு…. தலைவனுக்கு ஆமாம் தலைவரே… ஆகட்டும் தலைவரே என்று தலையாட்டும் நபர்களுக்கான அரசியல் களம் என்று விமர்சனங்களும் எழுவது உண்டு. சமகால அரசியல்வாதிகளில் பலர் பந்தாவாக அரசியல்களத்தில் பீடுநடை போடும் காட்சிகளையும் மக்கள் பார்த்து உள்ளனர்.
இதே 2021ம் ஆண்டு காலத்தில் ஒரு சாதாரண தொண்டன் மழையில் நனைய கூடாது என்பதற்காக அவருக்கு ஒரு எம்எல்ஏ குடைபிடித்து உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா..? அதுவும் தமிழகத்தில்…?
அப்படியான ஒரு மாற்றத்தக்க சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது நகர மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு சின்னப்பா பூங்கா அருகே பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர் கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னத்துரை. பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென பலத்த மழை பெய்து தள்ளியது. கூட்டம் ஒரு பக்கம் நடக்க, நடக்க, மறுபக்கம் மழையும் தாண்டவமாடியது.
பொதுக்கூட்டம் என்றவுடன் ஏதோ கழகங்களின் ஸ்டைல் பொதுக்கூட்டம் என்று படோபகாரமாக நினைக்க வேண்டாம். காம்ரேடுகளின் கூட்டம் அல்லவா…? திறந்த வெளி மேடையில் தான் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் ஜெகன் என்பவர் நன்றியுரை தெரிவித்து கொண்டிருந்தார். இவர் நன்றி தெரிவித்து கொண்டிருக்க லேசாய் ஆரம்பித்த மழை வெளுக்க ஆரம்பித்தது.
பலத்த மழையிலும் நனைந்தபடி ஜெகன் நன்றி கூறி கொண்டு இருப்பதை பார்த்த கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னத்துரை தமது இருக்கையில் இருந்து எழுந்தார். பேசிக் கொண்டு இருக்கும் ஜெகனுக்கு குடை பிடிக்க ஆரம்பித்தார்.
அவ்வளவு தான்… இந்த காட்சி அங்கு கூடியிருந்த மக்களை கவர்ந்தது. தலைவனுக்கு குடை பிடிக்க நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரும் இக்கால கட்டத்தில் தொண்டனுக்கு ஒரு எம்எல்ஏ குடை பிடித்தாரா? என்று அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.
ஆனால் இது பற்றி பேசும் காம்ரேடுகளோ.. இது ஒன்றும் புதிது அல்ல.. இயக்கத்தில் மிகவும் சாதாரணம்… எளிமை என்றால் அது இங்கே தானே என்று சிலாகிக்கின்றனர். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக… ஏனோ திராவிட கட்சிகளின் ஆடம்பர மாநாடுகள் எல்லோர் மனதிலும் நிழலாடுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது…!!