Modi : வாங்க ஜி! மதுரையில் போட்டியிடலாம்..பிரதமர் மோடிக்கு மதுரை பாஜகவின் புது கோரிக்கை !
Modi visit tamil nadu : பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வருகை :
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். காலை ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார். அதையடுத்து முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றுகிறார். ஹைதராபாத்தில் இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 5:45 மணியளவில் சென்னைக்கு வரவுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் என ரூபாய் 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி மதுரையில் போட்டியிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போதே பாஜகவுக்கு வெற்றி என்கிற வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்.
மதுரை பாஜக :
சென்னையின் பிரதான சாலைகளில் பளிச்சிடும் இந்த போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மதுரைக்காரர்களுக்கும் போஸ்டர்களுக்கும் அப்படி என்ன தான் பந்தமோ தெரியவில்லை, அந்த ஊர் அரசியல்வாதிகள் அடித்து ஒட்டும் சுவரொட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறது. அந்த வரிசையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அடித்து ஒட்டியுள்ள இந்த சுவரொட்டியும் இடம்பிடித்துள்ளது.
இதனிடையே தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க மதுரையில் இருந்து 500 நபர்களை வேன்களிலும், பேருந்துகளிலும் திரட்டி சென்னைக்கு அழைத்துச் செல்கிறார் பாஜக நிர்வாகி சரவணன். ஏற்கனவே ராகுல்காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாறி இங்குள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது பாஜகவினர் மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.