நடிகை குஷ்பு பாஜகவில் சேர திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி வெளியிட்ட நிலையில் உண்மை அம்பலமானதாலோ என்னவோ நடிகை குஷ்பு தன்னிலை மறந்து வரம்பு மீறி பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எப்போது கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? என்று நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும், நடிகை குஷ்பு தனது கட்சியான காங்கிரசின் தலைமைக்கு தான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் என்று. காங்கிரஸ் என்று தனது ட்வீட்டில் எங்கும் குஷ்பு குறிப்பிடவில்லையே தவிர மற்றபடி அவர் கேள்வி எழுப்பியது காங்கிரஸ் தலைமக்கு தான் என்று விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியில் சீனியர்களாக இருக்க கூடிய சஞ்சய் ஜா, சச்சின் பைலட் போன்றோர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதிலும் சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் ஜாவின் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்படி காங்கிரஸ் தலைமை அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் குஷ்பு இப்படி ஒரு பதிவை, அதாவது எப்போது கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? என்று வெளியிடுகிறார்.

இதையும் படிங்க;- வலை விரிக்கும் தமிழக பாஜக.. திரை மறைவில் நடக்கும் பேரம்... சிக்குவாரா குஷ்பு?

குஷ்புவும் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். எனவே இந்த சூழல் மற்றும் குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட் இவற்றை பொருத்திப் பார்த்து காங்கிரஸ் தலைமை மீது குஷ்பு அதிருப்தியில் இருக்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மேலும் குஷ்பு இப்படி ட்வீட் செய்ததை தொடர்ந்து பாஜகவின் கல்யானராமன் உள்ளிட்டோர் விரைவில் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக வெளிப்படையாகவே ட்வீட் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் பல பாஜக பிரபலங்களும் குஷ்புவை பாஜகவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் குஷ்பு தான்  தொடர்ந்து காங்கிரசிலேயே இருப்பதாக விளக்கம் அளித்தார்.

ஆனால் வேறு கட்சிக்கு செல்லப்போவதில்லை என்று திட்டவட்டமாக குஷ்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் கூட குஷ்பு விரைவில் பாஜகவிற்கு வருவார் என்று நம்புவதாக கல்யானராமன் மீண்டும் ஒரு ட்வீட் செய்தார். இதனால் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள பாஜக தரப்பில் விசாரித்தோம். அப்போது ஆமாம், குஷ்பு மட்டும் அல்ல மேலும் பலரை பாஜகவில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மிக முக்கியமான ஒரு நபர் உறுதி செய்தார். இதன் அடிப்படையில் தான் திரைமறைவில் பேரம், வலை விரிக்கும் பாஜக என்கிற தலைப்பில் செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியில் தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக குஷ்பு கருதியிருந்தால் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கலாம். அல்லது ஆசியா நெட் தமிழ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு எந்த சோர்சில் இந்த செய்தியை வெளியிட்டீர்கள் என்று கேட்டு இருக்கலாம். அதற்கு பதில் அளிக்க தயாராகவே உள்ளோம். ஆனால் அதை விடுத்து செய்தியை எழுதிய செய்தியாளர்களை வரம்பு மீறி குஷ்பு விமர்சித்திருப்பது அவருக்கு எந்த அளவிற்கு அறிவு இருக்கிறது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. குஷ்புவின் கடந்த காலத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் அவர் பதவி, பதவி, பதவி என்கிற ஒரே காரணத்திற்காகவே அரசியலுக்கு வந்தவர் என்று. முதலில் திமுக மற்றும் தற்போது காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிலுமே அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு எப்படி அலைந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தேர்தல் என்று அறிவிப்பு வந்தால் போதும் போட்டியிட வாய்ப்பு கேட்டு அறிவாலயத்தையும், சத்திய மூர்த்தி பவனையும் வட்டமடிக்க ஆரம்பித்துவிடுவார் குஷ்பு.

வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் அதற்கு காரணமானவர்களை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாக விமர்சிப்பார். திமுகவில் இருந்த போது தேர்தலில் வாய்ப்பு கொடுக்காத நிலையில் தான் பெரிய மேதாவி போல் கட்சித் தலைவரை தேர்வு செய்வது பொதுக்குழு தான் என்று கூறி ஸ்டாலினை எதிர்ப்பதாக நினைத்து திருச்சியில் அவரது ஆதரவாளர்களிடம் செருப்படி வாங்கினார் குஷ்பு. திமுகவில் இருந்து விலகிய பிறகு காங்கிரசுக்கு வந்த நிலையில் இங்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு குஷ்பு செய்த வேலைகள் அனைவருக்கும் தெரியும்.

தேர்தல் சமயத்தில் மட்டும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் வரும் குஷ்பு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தெரிந்தால் சத்தியமூர்த்தி பவன் பக்கம் வரமாட்டார். சீரியல்களில் நடிக்க சென்றுவிடுவார். இதனால் தான் தமிழக காங்கிரசிலும் அவரை ஓரம்கட்டி வைத்துள்ளார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. உண்மை இப்படி இருக்க, நமது கட்டுரையில் ஆட்சேபம் இருந்தால் அதனை மறுக்கலாம். இல்லை ஆசியா நெட் தவறாக சொல்கிறது, நான் யாரிடமும் பாஜகவில் இணைவது குறித்து பேச்சுவார்த் நடத்தவில்லை என்று தெரிவித்தால். அதனை செய்தியாக வெளியிட ஆசியாநெட் தயாராகவே உள்ளது.

ஆனால் உண்மை அம்பலமாகிவிட்ட அதிர்ச்சியில் குஷ்பு தன்னிலை மறந்து கொதிப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அவர் பாஜகவுடன் பேசுவது 100 சதவீதம் உண்மை என்பது போல் ஆகிவிட்டது. இனியாவது குஷ்பு பொதுவெளியில் பத்திரிகையாளர்கள் பற்றி வார்த்தையை சரியாக பயன்படுத்துவார் என்று நம்புகிறோம்.