காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் இருக்கும் குஷ்புவை பாஜகவில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2010ம் ஆண்டு தீவிர அரசியலுக்கு வந்தவர் குஷ்பு. எம்பி, மத்திய அமைச்சர், எம்எல்ஏ, மாநில அமைச்சர் என பல கனவுகளுடன் திமுகவில் இணைந்தார் அவர். கலைஞரின் அபிமானம் பெற்று திமுகவின் தலைமை கழக பேச்சாளர் ஆனார். நட்சத்திர பேச்சாளராக அங்கீகரிக்கப்பட்ட குஷ்பு, திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும் செயல்பட்டார். 2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூரில் போட்டியிட்டு அமைச்சராக வேண்டும் என்பது தான் அவரது முதல் நோக்கமாக இருந்தது. திமுகவில் சேர்ந்த போதே எம்எல்ஏ சீட் எனும் உறுதி அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மயிலாப்பூர் தொகுதி அப்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கலைஞர் குஷ்புவுக்கு வேறு தொகுதியை ஒதுக்க முன்வந்தார். ஆனால் குஷ்பு இல்லை தான் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வதாக கூறி வேறு எங்கும் போட்டியிடவில்லை. அதன் பிறகு தற்போது வரை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. திமுக தலைவர் கலைஞரின் அபிமானம் இருக்கும் காரணத்தினால் அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் போல் செயல்பட ஆரம்பித்தார் குஷ்பு.

வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திமுக ஒரு ஜனநாயக இயக்கம், கட்சியின் அடுத்த தலைவர் என்பதெல்லாம் பொதுக்குழுவில்தான் முடிவெடுக்கப்படும் என்று திமுகவின் பொதுச் செயலாளர் கூட பேசத் தயங்கும் கருத்துகளை தெரிவித்தார். இதனால் ஸ்டாலின் தரப்பு குஷ்பு மீது கடும் அதிருப்தி அடைந்தது. மேலும் கலைஞரின் அபிமானத்துடன் குஷ்பு திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஸ்டாலின் தரப்புக்கு உருத்தலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருச்சியில் வைத்து குஷ்புவை ஸ்டாலின் ஆதரவாளர்கள் செருப்பால் அடிக்கும் நிலை உருவானது.

இந்த விஷயத்தில் கலைஞர் குஷ்புவுக்கு ஆதரவாக இருந்த நிலையிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டது ஸ்டாலின் தரப்பு. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி முழுக்க முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. மு.க.அழகிரியே ஓரம்கட்டப்பட்டார். இதனால் தனக்கு திமுகவில் எதிர்காலம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து அப்போது மத்தியில் ஆட்சி அமைத்த பாஜகவில் இணைய குஷ்பு முயற்சி மேற்கொண்டார்.

பாஜக செய்தி தொடர்பாளர், மாநிலங்களவை எம்பி என பல்வேறு நிபந்தனைகளுடன் பாஜக மத்திய தலைமையுடன் குஷ்பு பேச்சுவார்த்தையில் இருந்தார். ஆனால் குஷ்பு பாஜகவில் இணைவதை அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை விரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட இழுபறியை தொடர்ந்து காங்கிரஸ் பக்கம் தாவினார் குஷ்பு. காங்கிரஸ் சார்பிலும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, இல்லை என்றால் மாநிலங்களவை எம்பி பதவி என குஷ்புவுக்கு வாக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் 2014ல் காங்கிரசில் இணைந்த குஷ்புவுக்கு தற்போது வரை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வாய்ப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. காங்கிரசில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த குஷ்பு அவர் ஓரங்கட்டப்பட்ட பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தேசிய அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழக அரசியல் தொடர்பான விவாதங்களை குஷ்பு தவிர்க்க ஆரம்பித்தார். தேசிய ஊடகங்களில் மட்டுமே காங்கிரஸ் சார்பில் பேசி வந்தார். அதையும் கூட தற்போது நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்பது போல் குஷ்பு கடந்த வாரம் ட்வீட் ஒன்றை போட்டார். இதனால் அவர் காங்கிரசில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இதனை மறுத்த குஷ்பு தான் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதாக விளக்கம் அளித்தார். ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் குஷ்புவுக்கு ஆதரவாக பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். குஷ்பு உடனடியாக சிந்தித்து பாஜகவிற்கு வர வேண்டும் என்று சிலர் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வருகின்றனர்.

மேலும் நமீதா போன்ற நடிகைகள் வரிசையில் குஷ்புவும் பாஜகவில் இணைந்தால் கட்சி கலர்புல்லாகிவிடும் என்று அவரை எப்படியாவது பாஜகவில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக குஷ்பு தரப்பில் சிலருடன் பாஜக நிர்வாகிகள் பேசி வருவதாக சொல்கிறார்கள். இங்கும் வழக்கம் போல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, மாநிலங்களவை எம்பி என குஷ்பு தரப்பு நிபந்தனைகள் முன்வைக்கப்படுவதாகவும் திரைமறைவில் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சிக்குவாரா குஷ்பு?