பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை... இது மனித குலத்திற்கே அவமானம் என கொதித்தெழுந்த குஷ்பு
Khushbu : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ததற்கு நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும், அவரது குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. அந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அந்த கும்பல் அவரைத் தாக்கியதோடு மட்டுமின்றி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயது குழந்தை உள்பட 7 பேரையும் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தங்களின் தண்டனையை குறைக்க அல்லது ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பவம் குஜராத்தில் நடந்ததால் இதுகுறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இதையும் படியுங்கள்... bilkis bano case: குற்றவாளிகள் விடுதலையால் நீதித்துறை மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது: பில்கிஸ் பானு வேதனை
இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடனே வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்படக்கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் ஆகும். பில்கிஸ் பானு மட்டுமில்லை எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பார்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... bilkis bano: பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் விடுதலையானவர்களில் சிலர் நல்ல பிராமணர்கள்: பாஜக எம்எல்ஏ சான்றிதழ்