ஆளுநரிடம் ஒரு பெற்றோர் நீட் விலக்கு குறித்து கேள்வி கேட்டதால் அது ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக மாறிவிடாது- பாஜக
நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் மாணவர்கள் யாருடைய பயிற்சியும் தேவை இல்லை. சுயமாக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த மக்களின் எண்ணம் இல்லை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ’எண்ணித் துணிக’ என்ற தலைப்பில், இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெற்றோர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் கூறுகையில்,
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என ஆளுநர் கூறினார். அதுமட்டுமில்லாது வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படிதான் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஒருவர் நீட் விலக்கு குறித்து ஆளுநரிடம் கேள்வி கேட்டதால் அது ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக அது மாறிவிடாது என தெரிவித்தார்.
நீட் பயிற்சி வகுப்புகள்
அரசுப் பள்ளிகளிலேயே இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதனை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. நீட் தேர்வில் ஏராளமான மாணவர்கள் தனியாக பயிற்சி பெறாமல் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இதற்கு முன்னாடி நுழைவுத் தேர்வு வைத்தும், நேர்முகத் தேர்வும் இருந்துள்ளது. அதன் பின்னர்தான் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் வைத்து பள்ளியில் மாணவர்கள் சேர்ந்த போது குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் மருத்துவ படிப்பில் 90% சேர்ந்தனர். அவ்வாறு மோசடிகள் நடைப்பெற்ற சூழலில் தற்போது பரவலாக அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை குறை கூறுவது அர்த்தமில்லை.
எண்ணம் இருந்தால் வெற்றி
நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஆளுநர் எப்படி அதன் மீது முடிவெடுப்பார். ஆளுநர் அவரது உரிமையை கூறி உள்ளார். தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் அரசுப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் மாணவர்கள் யாருடைய பயிற்சியும் தேவை இல்லை. சுயமாக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து பெருமை பேசிய முதலமைச்சர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளியை மேம்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தேர்வு வைக்க வேண்டும் என்று கூறினார் பல்வேறு காரணங்களை கூறி அதனை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் அரசாக திமுக உள்ளது. டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதற்கு பதிலாக அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்