எதிர்கட்சிகள் கூட்டத்திற்காக பெங்களூர் சென்ற ஸ்டாலினை சந்தித்த சிவக்குமார்.! மேகதாது அணை தொடர்பாக ஆலோசனையா.?
மேகதாது அணை கட்டியே தீருவோம் என தெரிவித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பெங்களூர் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
பாஜகவிற்கு எதிராக கூடும் எதிர்கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றி பெற விடாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் 17 கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக ஓரணியில் திரண்டு எதிர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த கூட்டமானது இன்றைய தினம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், மு.க.ஸ்டாலின்,
பெங்களூரில் 24 கட்சி தலைவர்கள்
ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 24 கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பெங்களூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாட்னாவில் சில முடிவுகளை எடுத்தோம். அதை தொடர்ந்து இன்றும் நாளையும் பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திக் 24 கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டங்களை கண்டு மத்திய பா.ஜ.க அரசு எரிச்சலடைந்துள்ளது.
ஸ்டாலினோடு டிகே சிவக்குமார் சந்திப்பு
அதன் வெளிபாடு தான் அமலாக்கத்துறை சோதனை எனவும், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்பும் தந்திரம் என தெரிவித்தார். இதனையடுத்து பெங்களூர் சென்ற முதலமைச்சரை கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். காவிரி அணையில் இருந்து தண்ணீர் தர வாய்ப்பு இல்லையென்றும், மேகதாது அணை கட்டியே தீருவோம் என விடாப்பிடியாக இருக்கும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது தேசிய அரசியல் நிலவரம் தொடர்பாகவும், மேகாது அணை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்