நடிகர் கமல்ஹாசன் 2 ஆண்டுகளுக்கு  முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும்  கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன்  60 என்ற விழா அண்மையில் நடைபெற்ற போது கமலும் ரஜினியும் இண்ந்து செயல்படப் போவதாக அறிவித்தனர். ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் இருவரும் இணைந்து அரசியலிலும் செயல்படுவார்களா என்ற கேள்வியும் விவாதமும் தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் தி அல்ஜிப்ரா- கிளப் நடத்திய ஓர் கெட் டு கெதர் நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் ஹிந்து என்.ராமுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது சமீபத்தில் நடந்த நிகழ்வில் ரஜினி-கமல் இருவரின் சகோதரத்துவம் பற்றி பேசப்பட்டது குறித்து கேட்டார். 

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “ரஜினிகாந்த் பெருமை மிகுந்த ஒரு தமிழன். அவர் அனைத்தையும் தமிழகத்துக்காகவே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் அடிப்படையில் அவரை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்வேன்.அவரும் அந்த மனநிலையில்தான் இருக்கிறார்” என்றார்.

திராவிட அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல், “ஒரு காலத்தில் திராவிட அரசியல் தமிழகத்தின் அன்றைய தேவையாக இருந்தது. காலத்தின் தேவையாக இருந்த திராவிட அரசியல் சிலரின் தேவையாக பிறகு மாறிவிட்டது. திராவிட அரசியல் தமிழகத்துக்கு தேவைதான். ஆனால் அது சரியான திசையில் செலுத்தப்பட வேண்டியதாக இருக்க வேண்டும்”என்று கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்தார்.