மானம் இருந்தால் அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது - இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்
கண்ணீரே வராமல் நீட் போராட்டத்தில் உதயநிதி நடிக்கிறார். அவருடைய நடிப்புக்கு ஆஸ்கர் விருதை கொடுக்கலாம். ஃபிராடுகளோடு சேர்ந்து போராட்டம் நடத்த முடியாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவினர் கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் பொதுக்குழு வழங்கில் உண்மை, தர்மம், நியாயம் வென்றுள்ளது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் கொண்டாடும் மகிழ்ச்சியான தீர்ப்பு இது என தெரிவித்தார். உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை உறுதிபடுத்தி உள்ள நிலையில், மேல்முறையீடுக்கு அவர்கள் எங்கு சென்றாலும் நியாயம் தர்மம் நீதி நிலைநாட்டப்படும் என கூறினார்.
அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது
மேலும் அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஓ.பி.எஸ். அணியினர் மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுகவின் கரை வேட்டி கட்டக்கூடாது. கோடியை பயன்படுத்தக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்பட வைத்த பேனர்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவின் வண்ணங்களை பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயல். இது மானம் இல்லாதவர்கள் தான் செய்வார்கள் என விமர்சித்தார்.
நீட் போராட்டம் - திமுக நாடகம்
நீட் விவகாரத்தில் அதிமுக எங்களோடு சேர்ந்து ஏன் போராட்டம் நடத்தவில்லை என திமுகவினர் கேட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இரண்டு வருடமாக திமுக எங்கே சென்றது? நீட்டு விவரத்தில் திமுக என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது என உலக மக்களுக்கே தெரியும். கண்ணீரே வராமல் உதயநிதி நடிக்கிறார். அவருடைய நடிப்புக்கு ஆஸ்கர் விருதை கொடுக்கலாம். ஃபிராடுகளோடு சேர்ந்து போராட்டம் நடத்த முடியாது. எங்களுடைய கொள்கை, கோட்பாடு நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதுதான். அந்த அடிப்படையில் தான் மசோதா கொண்டு வந்தோம். இது தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று. இந்த கொள்கையில் இருந்து எப்போதும் மாற மாட்டோம். மக்களுக்கும் மாணவர்களுக்கும் நீட்டில் விருப்பமில்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்