பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்
ஜாதிச் சான்றிதழுக்காக இன்னுயிரை இழந்த, மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜாதி சான்றிதழ்- தீக்குளிப்பு
ஜாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிர் இழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசின் முதலமைச்சரான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது கையாலாகாத ஆட்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் 11.10.2022 அன்று அதிகாரிகள் தனது மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 12.10.2022 அன்று காலை உயிரிழந்துள்ளார்.
தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு, நரிக்குறவர் வீடு, தாழ்த்தப்பட்டோர் வீடு என்று செல்வதும், தான் உடன் எடுத்துச் சென்ற சாப்பாட்டை அவர்களுடன் சாப்பிட்டு போட்டோ ஷூட் நடத்துவதும், இப்படி செய்வதாலேயே அந்த மக்களின் வாழ்வு வளம் பெற்றுவிட்டது என்று பகல் கனவு காணும் முதலமைச்சரைப் பெற்றிருப்பது நம் மக்களின் தலையெழுத்து.
வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி
போட்டோ ஷூட் நடத்தும் ஸ்டாலின்
சில மாதங்களுக்கு முன்பு, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சுயதொழில் புரிய கடன் தருவதாகக் கூறி போட்டோ ஷூட் நடத்தினார் விடியா அரசின் முதலமைச்சர். ஆனால், கூறியபடி கடன் வழங்கப்படாததால் அந்தப் பெண் கொடுத்த பேட்டி அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்ததை அனைவரும் அறிவர். 11.10.2022 அன்று வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு ஜாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து, அச்சான்றிதழ் அரசு அதிகாரிகளால் வழங்கப்படாததால், மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார்.
முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும் என்பதுபோல், அப்பாவி மக்களைப் பற்றி இன்றைய விடியா அரசின் ஆட்சியாளர்களைப் போலவே, அதிகார வர்க்கமும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது."பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கை மரத்தில்தான் குடித்தனம் நடத்தவேண்டும்" என்ற நிலையில் திமுக-விற்கு வாக்களித்த தமிழக மக்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்துதான் எந்த ஒரு சான்றிதழும் பெற முடியும் என்ற நிலைக்கு மக்களை இந்த விடியா அரசு தள்ளி இருக்கிறது.
டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..! உள்துறை அமைச்சரை சந்திக்கிறாரா.?
மகனின் ஜாதிச் சான்றிதழுக்காக தன் இன்னுயிரை தீந்தணலுக்கு பலியிட்ட அப்பாவி மலைக்குறவரின் செயலுக்கு இந்த விடியா அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும். நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா அரசின் முதலமைச்சர், ஜாதிச் சான்றிதழ் பெற முடியாமல், விலைமதிக்க முடியாத உயிரை நீத்த மலைக்குறவர் குடும்பத்திற்கு என்னசொல்லப் போகிறார்? ஜாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலையின் நிகழ்ச்சிக்கு சென்ற பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் மோதல்..! கமலாலயத்தில் பரபரப்பு