நாளை தமிழகம் வரும் அமித்ஷா..! இபிஎஸ்க்கு போட்டியாக ஓபிஎஸ் போடும் பிளான்.. பலிக்குமா?
இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வமும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் வரும் அமித்ஷா
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு 10 மாத காலம் மட்டுமே இருப்பதால் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா பல்வேறு மாநிலங்களுக்கு நேரில் சென்று மோடி ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேட்டறிந்து ஆலோசனை அளித்து வருகிறார். இந்த நிலையில் வரும் 11-ம் தேதி சென்னை, பள்ளிக்கரணையில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து வேலூரில் நடைபெறும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
அமித்ஷாவை சந்திக்கும் ஓபி்எஸ்- இபிஎஸ்
இதற்காக நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி நட்சத்திர விடுதியில் தங்கவுள்ளார். நாளை இரவு அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பில் அதிமுக- பாஜக தலைவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இரண்டு தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாகவும், பா.ஜ.க போட்டியிடவுள்ள தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்து தருவது தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றினைக்க திட்டமா.?
கடந்த இரண்டு வாரமாக சேலத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி நாளை காலை சென்னை வருகிறார். தேனி மற்றும் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வமும் இன்று மாலையே சென்னை வரவுள்ளார். நாளை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கும் போது பா.ஜ.கவுக்கான தொகுதிகள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை போல ஓபிஎஸ்யையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றினைந்த செயல்பட அமித்ஷா மீண்டும் எடப்பாடியிடம் வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.
9 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மாநில தலைவர் 25 பாஜக எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பும் வகையில் களப்பணியாற்றி வருகிறார். இருந்த போதும் தென்சென்னை, வேலூர், கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம், 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், அதை முன்வைத்தே தென்சென்னை மற்றும் வேலூருக்கு அமித்ஷா வரவுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை மாற்ற திட்டமா.? வெளியான பரபரப்பு தகவல்