அண்ணாமலையின் நடை பயண துவக்க விழாவிற்கு அழைப்பு விடுத்தும் புறக்கணிக்கும் அதிமுக.! என்ன காரணம் .?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை நடை பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், துவக்க விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணி கட்சிக்கு அழைப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை தொடங்க உள்ளார். பாஜக மூத்த தலைவர் அமித்ஷா இந்த நடை பயணத்தை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயண துவக்க விழாவிற்கு பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி கலந்து கொள்வாரா.?
ஆனால் அண்ணாமலையின் நடைபயணத்தில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அதிமுக சார்பாக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியான நிலையில், அதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் நடை பயணத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கவில்லையென அண்ணாமலை தெரிவித்தார். இந்தநிலையில் அண்ணாமலை நடை பயணத்தில் அதிமுக கலந்து கொள்ளாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் பாஜக அதிமுக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
அண்ணாமலை- எடப்பாடி மோதல்
ஒருவரை ஒருவர் அவ்வப்போது மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் தேசிய தலைமையோ தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என கூறி வருகிறது. இதன் காரணமாக அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை தன்னையும், தனது கட்சியும் முன்னிலைப்படுத்துவதற்காக நடை பயணத்தில் ஈடுபடுவதாக கூறி அதிமுக இந்த நடைபயணத்தை புறக்கணிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் நாளை மதுரை வரும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
நாளை தமிழகம் வரும் அமித்ஷா..! யாரை சந்திக்கிறார்.? எங்கே எல்லாம் செல்கிறார்.? வெளியான பயண திட்டம்