ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதனை கண்டித்து பாஜக நிர்வாகி குஷ்பு அதிரடியாக கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரித்த தனி நீதிபதி, 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்,ஆர்.எஸ்.எஸ் தரப்பில் பொதுவெளியில் நடத்த அனுமதி அளிக்குமாறும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கடுமையான ஒழுங்குகளுடன் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் ஆணையிடப்பட்டது. மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். ஆனால் அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி நேற்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மார்ச் 5-ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகம் உள்ளது என்பதை கூட உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே அனுமதியே வழங்கும். அதற்கான பாடத்தை திமுக கற்க வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருங்கள் என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ்- ஐ பார்த்து திமுகவுக்கு பயமா? பட்டால் தான் புரியும். முதல்வர் ஸ்டாலின் அவர்களே எது உங்களை பயமுறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..“நான் அவள் இல்லை” கதறி அழுத கணவன்.! கில்லாடி மனைவி - திருமணத்துக்கு பெண் பார்ப்பவர்களே உஷார்..!