நீங்கள் தினமும் ஜிம்முக்கு போய் உடம்பை நன்றாக வைத்துக் கொள்வீர்கள். எனக்கு இடுப்புக்கு கீழே விளங்காது. நானும், நீங்களும் ஒரே கோர்ட்டில் ஓடி வெற்றி கோட்டை தொட வேண்டும். இதுதான் ஜனநாயகமா?
‘‘செத்து சாம்பலானாலும் தனியாகத்தான் போட்டியிடுவோம். ராமதாஸ், வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் போன்றோர் செய்த தவறை செய்ய மாட்டேன்’’ என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘‘முன்னோர்கள் செய்த தவறை நான் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். மா.போ.சியோ,சி.ப ஆதித்தனாரோ, கி.ஆ.பே விசுவநாதனோ, மறைமலை அடிகளோ, சமகாலத்தில் எனது முன்னோடிகளான எங்கள் ஐயா மருத்துவ ராமதாஸோ, எங்கள் அண்ணன் திருமாவளவனோ, அண்ணன் வைகோவோ, விஜயகாந்தோ இவர்கள் செய்த தவறை நான் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். எனக்கு என்ன அழுத்தம் என்றால் ஜெயிலில் போட்டு பார்த்தாய். வழக்கு போட்டு பார்த்தாய்... அவதூறை கிளப்பி விட்டு பார்த்தாய்.. என்னென்னமோ செய்து பார்த்தாய்.
எனக்கே ரைடு விட்டாய். நான் ஒன்றும் கலங்கவில்லையே. என்னிடம் ரைடு நடக்கும். கூட்டணி பேச்சு வார்த்தை வீட்டில் நடக்கும். ஆயிரம் கோடி கட்சிக்கு. 100 கோடி குடும்பத்திற்கு எனப் பேசுவார்கள் காதில் ஊத்துகிற தேனை கொஞ்சம் வாயிலே ஊத்துங்க என்று கேட்டு பார்த்தேன். போய்விட்டார்கள். இப்போது புரிகிறதா? ஒன்றும் கேட்கவில்லை. நான் உங்களுடன் வந்து விடுகிறேன் ஐயா. சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுப்பார்கள். அதற்கு பிறகு போன் அடித்தால் எடுப்பீர்களா? எனக்கு கேட்டால் பதில் இருக்காது. அதை விடுங்கள்.
தனித்து நிற்க வேண்டும். தனித்துவத்தை இழந்து விடக்கூடாது. தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்க வேண்டும். என்னடா தம்பி 36 லட்சம் வாங்கியவன் இன்னொரு 36 லட்சம் கூட ஏறிவிட மாட்டேனா? கடலையே தாண்டி விட்டேன். கரை தான் இருக்கிறது. 2016-ல் இவ்வளவு நேரம் நின்று இவ்வளவு கருவிகளை (கேமரா) வைத்து என்னை எடுத்தீர்களா? 2026 நெருங்கும் போது நிற்கிறீர்கள் அல்லவா? 2026க்கு பிறகு இன்னும் நிறைய பேர் கூடி ரொம்ப நேரம் என்னை பேச வைப்பீர்கள். எங்க அப்பா மணியரசன் சொன்னது போல் தம்பி பேட்டி கொடுத்தால் அது ஒரு பொதுக்கூட்டம் என்பார்.
வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க மாட்டான். சாதி, மதம் கடவுளை பற்றி சாமியை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப் பற்றி சிந்திப்பவன் சாதி, மதம் கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது, தேவையும் இருக்காது. நீங்கள் சொல்வது தேர்தலில் பிரதிபலிக்குமா? என்று கேட்டால் அதுதான் தேர்தல் அரசியல். வாக்கு செலுத்துகிறார்கள், செலுத்தவில்லை. இது நம் பிறவி கடமை என மக்களுக்காக வேலை செய்வது மக்கள் அரசியல். மற்றவர்கள் எந்த அரசியலை செய்கிறார்கள்? இந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதிக்கு நான் எவ்வளவு செலவழித்தேன் தெரியுமா? மத்த கட்சிகள் எவ்வளவு செலவழித்திருக்கும் தெரியுமா? மற்ற கட்சிகள் தொகுதிக்கு 50 கோடி 60 கோடி செலவழித்திருக்கும். நான் மொத்தமாகவே மூன்று கோடி தான் செலவழித்தேன்.
36 லட்சம் வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி இருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஐயா விஜயகாந்த் கட்சிக்கு அடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி. நான் ஒரு எளிய மகன். என் வேட்பாளர் யார் என்று தெரியாது. நான் ஆறு தேர்தலாக போட்டியிட்ட சின்னத்தை முடக்கி விட்டு ஒரு மைக் சின்னம் கொடுத்தார்கள். நீங்கள் என்ன ஜனநாயகம் வைத்திருக்கிறீர்கள்? 75 வருடம் ஒரு கட்சிக்கு ஒரே சின்னம். 60 வருடம் ஒரு கட்சி ஒரே சின்னம். தேசிய மலரை கொண்டு போய் ஒரு கட்சிக்கு சின்னமாக வைத்தான். கையை ஒரு சினமாக வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் தேர்தலுக்கு முதல் நாள் ஒரு சின்னத்தை எனக்கு கொடுத்தார்கள்.
ஒரு பின்புறமும் இல்லாத எளிய பிள்ளைகள் நாங்கள். ஒன்றாக மோத வேண்டும் என்றால் இதில் இது என்ன ஜனநாயகம்? இதில் சம வாய்ப்பு, சம உரிமை என்கிற வார்த்தைகளை வேறு போட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் தினமும் ஜிம்முக்கு போய் உடம்பை நன்றாக வைத்துக் கொள்வீர்கள். எனக்கு இடுப்புக்கு கீழே விளங்காது. நானும், நீங்களும் ஒரே கோர்ட்டில் ஓடி வெற்றி கோட்டை தொட வேண்டும். இதுதான் ஜனநாயகமா? மொத்தமாக எடுத்து விடுங்கள். ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொரு கட்சிக்கும் புதிது புதிதாக சின்னத்தை கொடுங்கள். அப்போது என்னுடன் மோத வாருங்கள். செத்து சாம்பலானாலும் நாங்கள் தனியாகத்தான் போவோம்’’ எனத் தெரிவித்தார்.
