How many parties are there in TN? : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கூட்டணியில் இழுபறி, தொகுதி பங்கீட்டில் சிக்கல் என தினசரி பல செய்திகளை கேட்டு வருகிறோம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் தேவைதானா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

பரபரக்கும் அரசியல் களம்

இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பானது மற்றும் உணர்ச்சிகரமானது. தமிழகத்தில் பிரதான கட்சிகளைத் தவிர்த்து ஏராளமான சிறிய கட்சிகள் உள்ளன. தேர்தல் சமயங்களில் இந்த கட்சிகள் பெரிய கூட்டணியை தேடிச் செல்வதும், சீட்டு கேட்டு அவர்களிடம் போராடுவதும், சீட்டு கிடைக்கவில்லை என்றால் கூட்டணி மாறுவதுமாக காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் எத்தனை கட்சிகள் தேவைதானா? இதை கட்டுப்படுத்துவதற்கு வழிகள் உண்டா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் எத்தனை கட்சிகள் உள்ளன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளது. இதை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். திமுக, அதிமுக போன்றவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் ஆகும். இவர்களுக்கு நிரந்தர சின்னம் மற்றும் மாநிலம் தழுவிய வாக்கு வங்கி உண்டு. 

மேலும் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தில் வலுவான கிளைகளைக் கொண்டுள்ளன. இதற்கிடையில் பதிவு செய்யப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் அதிகம் உள்ளன. சாதி, மதம், பிராந்தியம் மற்றும் தனிநபரின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த மூன்றாவது வகை கட்சிகள் செயல்படுகின்றன.

எதற்காக இத்தனை கட்சிகள்?

2026 தேர்தலைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையிலான அணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளில் சிலவற்றிற்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல் அதிமுகவும் சில கட்சிகளுக்கு மட்டுமே இடங்களை ஒதுக்கி உள்ளது. 

வாய்ப்பு கிடைக்காத கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளை வசை பாடுவது வழக்கமாகி வருகிறது. மேலும் தினசரி செய்திகளிலும் கூட்டணி உடைகிறது, கூட்டணி பிரிகிறது போன்ற பிரேக்கிங் வெளி வருகின்றன. இதை பார்க்கும் நமக்கு இயல்பாகவே மனதில் ஒரு கேள்வி எழுகிறது. தமிழகத்தில் எதற்காக இத்தனை கட்சிகள்? இவர்களால் என்ன பயன்? என்பதுதான்.

இத்தனை கட்சிகள் தேவையா? (சாதகமும் பாதகமும்)

இந்தக் கேள்விக்கு ஆம் மற்றும் இல்லை என்று இருபுறமும் நியாயங்கள் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்கள் உள்ளன. ஒரு பெரிய கட்சி குறிப்பிட்ட சமூகத்தை அல்லது பிரச்சினையை கண்டுகொள்ளாத போது சிறிய கட்சிகளே அவர்களின் குரலாக மாறுகின்றன. மேலும் தமிழகத்தில் ஊறி திளைத்திருக்கும் திராவிட அரசியலுக்கு மாற்றாத தமிழ் தேசியம், சுற்றுச்சூழல் அரசியல், புதிய மாற்று, மாற்று அரசியல் சிந்தனை, ஊழல் எதிர்ப்பு போன்ற கருத்துகள்களை முன்னெடுக்க புதிய கட்சிகள் அவசியமாகின்றன.

வாக்கு பிரிப்பான்களாக செயல்படும் கட்சிகள்

பல நேரங்களில் சிறிய கட்சிகள் உண்மையான மாற்றத்திற்காக போட்டியிடாமல் பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் வாக்கு பிரிப்பான்களாக செயல்படுகின்றன. சில கட்சிகள் தேர்தலின் போது பெரிய கூட்டணிகளுடன் பேரம் பேசவும், தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களை வாபஸ் பெறவும் மட்டுமே தொடங்கப்படுகின்றன. கொள்கைக்காக இல்லாமல் குடும்பத்தின் வாரிசுக்காகவோ அல்லது தனிப்பட்ட நபரின் புகழுக்காகவோ கட்சிகள் தொடங்கப்படுவது ஜனநாயகத்தின் தரத்தை குறைப்பதாக உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த என்ன வழி?

அரசியல் கட்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்ட ரீதியாக சில சீர்திருத்தங்களை செயல்படுத்தலாம். தற்போது ஒரு கட்சியை பதிவு செய்வது எளிதான நடைமுறையாக உள்ளது. இதை இன்னமும் கடுமையாக்கலாம். தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற தவறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு அவற்றின் நிதி வரவு செலவுகளை கடுமையாக தணிக்கை செய்ய வேண்டும். 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வைப்பு தொகையை உயர்த்துவதன் மூலம் பொழுதுபோக்கிற்காக அல்லது உள்நோக்கத்துடன் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். மக்களுக்கு தங்களுக்கு பிடிக்காத சிறிய கட்சிகள் மற்றும் கொள்கையற்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். சிறிய கட்சிகள் தகுதியான வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்பதும், பேரம் பேசுபவர்களை நிராகரிப்பதும் மக்கள் கைகளில் தான் உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளை இறுக்குதல்

அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகள் மற்றும் அவற்றின் செலவுகளை தேர்தல் ஆணையம் பொது வெளியில் வெளியிட வேண்டும். இது போலி கட்சிகள் நிதி திரட்டுவதை குறைக்கும். கட்சிகள் தொடங்குவதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தேர்தலில் போட்டியில்லாத அல்லது மிகக் குறைந்த வாக்குகளைப் பெறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தல், பெயரளவு கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குதல் மாநில கட்சியாக நீடிக்க வேண்டுமானால் 6 முதல் 8% வாக்குகளை பெற வேண்டும் என்கிற விதியை கடுமையாக்குதல் போன்றவை நடைமுறைக்கு வந்தால் இந்த சிறிய கட்சிகளின் எண்ணிக்கையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை கட்சிகளின் எண்ணிக்கை என்பது ஜனநாயகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டாலும், அது தரம் சார்ந்த அரசியலாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதேபோல் பெரிய கட்சிகளும் ஜனநாயகம் என்கிற போர்வையில் போலியாக செயல்படாமல், பேர அரசியல்களுக்கும், கூட்டணி கூத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.