எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு... விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் அதிமுக ஆட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியல்… 3ம் இடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையும் வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில்,அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை விசாரணையின் போது, வேலுமணி சார்பில், தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், அதுவரை கடுமையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைய தேதிக்கு (ஆக.11க்கு) ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நடத்துவது டாஸ்மாக்கு.. போதை இல்லா தமிழகம் உருவாக்க போறாராம்.. திமுக அரசை டாரா கிழிக்கும் அண்ணாமலை.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அஸத் முகமது ஜின்னா ஆஜராகி, எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எனவே அந்த விசாரணைக்கு தடை விதிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் எஸ்.பி. வேலுமணி தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது என்றும், அதேசமயம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது என்றும் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். அத்துடன் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆக.25க்கு ஒத்திவைத்தனர்.