திருச்சி மாவட்டம் பாலகரையைச் சேர்ந்தவர் விஜயரகு. அரசியல் பிரமுகரான இவர் திருச்சி மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் அவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் விஜயரகுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த விஜயரகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார். இதுதொர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று சென்னையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கொலையில் ஈடுபட்ட மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விஜயரகுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்து வந்ததாகவும் அதை விஜயரகு கண்டித்ததால் ஆத்திரமடைந்த மிட்டாய்பாபு அவரை கொலைசெய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே விஜயரகு குடும்பத்தினரை சந்தித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். தமிழக பாஜக சார்பாக 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முகமது பாபு என்பவரின் பெயரை ஊடகங்களும் போலீசும் மிட்டாய் பாபு என்று மாற்றி சொல்கிறார்கள் என்றும் ஊடகங்களே பயங்கரவாதியை கண்டு பயப்படலாமா? என்றார். இது தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலை என்று ஐஜி அமல்ராஜ் கூறியதை மறுத்த ராஜா, இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு விஜயரகுவின் கொலையே சான்று என்றார். மேலும் திருச்சி பாலகரையில் இருக்கும் அனைத்து வீடுகளில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!