தேசிய அளவில் வளரும் ஆம் ஆத்மி.. சகித்துக் கொள்ளாத பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் காரணம்!
நாங்கள் தேசிய அளவில் உயர்வதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆனார். இதேபோல டெல்லியைத் தவிர்த்து பிற மா நிலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஆம் ஆத்மி பணிகளைத் தொடங்கியது. அதில் முதல் கட்டமாக பஞ்சாப்பில் வெற்றி பெற்று ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. மேலும் உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலிலும் சில தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது ஆம் ஆத்மி.
இதையும் படிங்க: முர்மு வெற்றி எதிரொலி... 11 சட்டமன்ற தேர்தல்களில் தட்டித் தூக்கப் போகும் பாஜக... செம்ம மாஸ்டர் பிளான்.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியினர் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் முடக்குவதற்கு சதிகள் நடைபெறுவதாக அக்கட்சி தொடர்ந்து புகார் கூறி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் புதிய கலால் கொள்கை குறித்து விசாரணை நடத்தும்படி மத்திய புலனாய்வு அமைப்புக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்திருக்கிறார். இதன்மூலம் டெல்லி துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன் வைத்திருக்கிறார். இந்நிலையில் பாஜகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு என்ன காரணம் என்பது பற்றி அர்விந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ. 600 கோடி தானமாக கொடுத்தது இவர்தான்!!
டெல்லியில் செய்தியாளர்களைச் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மணீஷ் சிசோடியாவை அவர்கள் (பாஜக) கைது செய்வார்கள் என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவில் தற்போது ஒரு புதிய அமைப்பு உள்ளது. அதில், யார் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள். பிறகு அந்த நபர் மீது ஒரு போலி வழக்கு உருவாக்கப்படுகிறது.
அதுபோல இந்த வழக்கும் போலியானது. இதில் உண்மை எதுவும் இல்லை. எங்கள் மீது பல வழக்குகளை அவர்கள் போட்டு வருகிறார்கள். என்றாலும் நாங்கள் சிறைகளுக்கு செல்ல அஞ்சவில்லை. நாட்டில் ஆம் ஆத்மி கட்சிக்கான நேரம் வந்துவிட்டது. பஞ்சாப்பில் வெற்றி பெற்றதிலிருந்து ஆம் ஆத்மி வளர்ந்து கொண்டே செல்கிறது. நாங்கள் தேசிய அளவில் உயர்வதை அவர்களால் சகித்துக்கொள்ளக் கூட முடியவில்லை. அதனால்தான் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த தேர்தல் என் மகன் போட்டியிடுவார்… அவருக்கும் ஆதரவளியுங்கள்… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு!!