Asianet News TamilAsianet News Tamil

ஓட்டுனர், நடத்துனர்களை நிம்மதியா வீடுங்க.. டார்க்கெட் கொடுத்து டார்ச்சர் செய்யாதீங்க.. ராமதாஸ் ஆவேசம்..!

பேருந்தில் ஏறும் அனைத்தும் பயணிகளுக்கும் பயணச்சீட்டு வழங்குவது, அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்வது ஆகியவை தான் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் செய்யக்கூடிய பணிகள் ஆகும். அதை 99% நடத்துனர்களும், ஓட்டுனர்களும் சரியாகவே செய்கின்றனர்.

Goal Setting for tamilnadu Government Bus Drivers and Conductors Goal... Ramadoss Condemnation
Author
First Published Sep 7, 2022, 2:08 PM IST

போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க;- தமிழ் பயிற்று மொழியாக எப்போது மாறும் ? தலையில் அடித்து கதறும் ராமதாஸ்.! காத்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் !

Goal Setting for tamilnadu Government Bus Drivers and Conductors Goal... Ramadoss Condemnation

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பதாலும், அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாலும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாக அப்போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் செலவில், ரூ.3.40 கோடி விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈடு செய்யப்படுவதாகவும், மீதமுள்ள ரூ.6.60 கோடி கூடுதல் செலவை ஈடு செய்யும் வகையில் பேருந்துகள் மூலமான வருவாயை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 3,233 மாநகரப் பேருந்துகளும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் ஈட்ட வேண்டிய வருவாயையும் அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சென்னை வடபழனி பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு ஒரு சுற்றுமுறைக்கு குறைந்தபட்சம் ரூ.2,368 முதல் அதிகபட்சமாக ரூ.14,638 வரை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான வருவாயை விட 20% முதல் 25% வரை அதிகம் ஆகும். இந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றது. இது ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு மன உளைச்சலையே ஏற்படுத்தும்.

Goal Setting for tamilnadu Government Bus Drivers and Conductors Goal... Ramadoss Condemnation

போக்குவரத்துக் கழகங்களின் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. அதை ஈடுகட்டும் வகையில் அவற்றின் வருவாயை பெருக்க வேண்டியதும் அவசியம் ஆகும். அதற்கு புதுமையான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டியது போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் கடமையாகும். மாநகரப் பேருந்துகளில் விளம்பரங்களை செய்ய அனுமதிப்பதன் மூலம் மாதத்திற்கு ரூ.3.40 கோடி வருவாய் ஈட்டுவது அத்தகைய வரவேற்கத்தக்க முயற்சிகளில் ஒன்று தான். அதேபோல், சென்னையில் உதிரிபாகங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 800 பேருந்துகளை சீரமைத்து மீண்டும் இயக்க திட்டமிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது தான். இத்தகைய வழிகளில் போக்குவரத்துக் கழகத்தின் வருவாயைப் பெருக்குவது தான் பயனளிக்கும் நடைமுறையாகும்.

மாறாக, கூடுதல் செலவுகளின் பெரும்பகுதியை ஈடுகட்டுவதற்கான தொகையை நடத்துனர்கள் தான் பயணச் சீட்டு விற்பனை மூலம் ஈட்டித் தர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பது, அந்த பேருந்து பயணிக்கும் தடம், பயணிக்கும் நாள், பயணிக்கும் நேரம், அன்றைய நாளில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் ஆகியவற்றை பொருத்தது தான்; இதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் பங்கு ஏதுமில்லை. இல்லாத பயணிகளை ஒட்டுனர்களும், நடத்துனர்களும் தேடிக் கண்டுபிடித்து பயணிக்கச் செய்ய முடியாது.

இதையும் படிங்க;- திடீர் மாரடைப்பால் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமைச்சர்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

Goal Setting for tamilnadu Government Bus Drivers and Conductors Goal... Ramadoss Condemnation

பேருந்தில் ஏறும் அனைத்தும் பயணிகளுக்கும் பயணச்சீட்டு வழங்குவது, அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்வது ஆகியவை தான் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் செய்யக்கூடிய பணிகள் ஆகும். அதை 99% நடத்துனர்களும், ஓட்டுனர்களும் சரியாகவே செய்கின்றனர்; இத்தகைய சூழலில் அவர்களை கூடுதலாக வருவாய் ஈட்டித் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமற்றதாகும். வசூலை அதிகரிப்பதில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பெரிய அளவில் பங்கு இல்லை.

போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் ஏராளமான உள்ளன. அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்யக்கூடிய வழித்தடங்களில் குறைந்த அளவில் தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன; அந்த தடங்களில் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குதல், தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது மிக அதிக விகிதத்தில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தல், போக்குவரத்துக் கழகங்களில் நடக்கும் வீண் செலவுகளை குறைத்தல் போன்றவற்றின் மூலம் போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பது உறுதி.

Goal Setting for tamilnadu Government Bus Drivers and Conductors Goal... Ramadoss Condemnation

எனவே, நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பதை போக்குவரத்து கழகங்கள் கைவிட வேண்டும். அதன் மூலம் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிம்மதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- செருப்பை வழிபட்டவர்கள்தான் பாஜகவினர்.. அண்ணாமலையை டீல் பண்ண ஸ்டாலினுக்கு தெரியும்.. கி. வீரமணி கலாய்.

Follow Us:
Download App:
  • android
  • ios