லெஜண்ட் சரவணன் போல் விளம்பர படங்களில் போஸ் கொடுக்கும் ஸ்டாலின்...! திமுக அரசை கலாய்க்கும் செல்லூர் ராஜூ
மக்கள் கடனிலும், பசி பட்டினியில் தவித்து கொண்டுள்ள போது கலைஞர் பேனாவுக்கு சிலையா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 2000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கருப்புப சட்டை அணிந்து கொண்டு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி திமுகவுக்கு எதிராகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை வருடத்தில் ஒன்றுமே திமுக செய்யவில்லை. ஸ்டாலின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பொய்யை தான் சொல்கின்றனர். வாய்ச்சவடால் தான் பேசுகின்றனர் என விமர்சித்தார். கலைஞர் பயன்படுத்திய பேனா உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய பேனாவிற்கு கடலில் சிலை கட்ட போகிறார்களாம். கடனிலும்,பசி பட்டினியிலும் மக்கள் தவித்து கொண்டுள்ள போது கலைஞர் பேனாவுக்கு சிலையா? என கேள்வி எழுப்பினார். சிமெண்ட் விலை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு , வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் போது 81 கோடி ரூபாயில் பேனாவுக்கு சிலையா. இதுக்கு பணம் உள்ளது. வாக்களித்த மக்களுக்கு பணம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல மதுரையில் 100 பேருந்துகள் ஓடிய நிலையில் வெறும் 39 பேருந்துகளே ஓடுகின்றன என கூறினார். மதுரை மக்களுக்கு ஒரு சல்லி பைசா கொடுக்காத அரசு திமுக. ஆனால் அப்பா பெயரில் நூலக கட்டிடம் கட்ட மட்டும் நிதி உள்ளதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் வராத மின்சாரத்திற்கு மின்சார கட்டணம் வேறா? மின் கட்டண உயர்வுக்கு ஓன்றிய அரசு அழுத்தம் கொடுத்தார்கள் என கூறுகிறார். திமுக ஒன்றிய அரசு சொன்னதை எல்லாம் செய்தார்களா? என கேள்வி எழுப்பிய அவர், ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சொன்னார்கள். அதை திமுக அரசு செய்ததா? அதிமுக ஆட்சியில் மின்கட்டணத்தை 10, 20 காசு உயர்த்திய போது பதாகையை கையில் ஏந்தி போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கும் சூழ்நிலை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முன்மாதிரியாக சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே மோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சென்று விட்டதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் மாணவ,மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்லை. நீட்டை ரத்து செய்ய என் தந்தைக்கு தான் சூசகம் தெரியும் என உதயநிதி சொன்னாரு. இப்போ வரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. திமுக வாக்குறுதி கொடுத்தும் இரண்டு முறை நீட் தேர்வு நடைபெற்று விட்டதாகவும் விமர்சித்தார். ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது. அதிமுக காலத்தில் பொங்கலுக்கு அள்ளி அள்ளி கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 5 பைசாவாவது கொடுத்தார்களா எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திய விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் தற்போது ஆளையே காணவில்லை என விமர்சித்தார். திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது வாயை திறப்பதே இல்லையென்று கூறியவர் அவர்கள் வாயில் திண்டுக்கல் பூட்டு போட்டு உள்ளார்கள என கூறினார். லெஜண்ட் சரவணன் மாதிரி வரும் ஸ்டாலின் நடித்து செஸ் போட்டிக்கு விளம்பரம் செய்கிறார். ஆனால் செஸ் சாம்பியன்களை அந்த விளம்பரத்தில் காணவில்லையென குற்றம் சாட்டினார்.
பிரதமர் இபிஎஸ்ஐ சந்திக்க மறுப்பா? டெல்லியில் நடந்தது என்ன? ஜெயக்குமார் பரபரப்பு தகவல்..!