விளம்பரம் தேடும் முதலமைச்சர்.! சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்..ஸ்டாலின் மீது சீறிய ஜெயக்குமார்
லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் சோதனை நடத்தி அதிமுகவை அடக்கிவிட முடியாது எனவும், இதற்கு எல்லாம் வரக்கூடிய நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை
ஊழல் செய்துள்ள அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலின் போது திமுக வாக்குறுதி கொடுத்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பதவியேற்ற அரசு முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, தங்கமணி, வேலுமணி என லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தடுத்து சோதனைகளில் ஈடுபட்டனர். அவர்களின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 2 மாத காலமாக அமைதியாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
இந்தநிலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதில் எல்லாம் அரசு கவனம் செலுத்தாமல், முன்னாள் அமைச்சர்கள் இல்லத்தில் ரெய்டு நடத்துவதாக கூறினார். முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றாமல், பெயருக்கு நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தன்னை விளம்பரம் படுத்திக்கொள்வதில் தான் முதல்வர் கவனம் செலுத்துவதாக ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்லத்தில் ரெய்டு நடத்துவதன் மூலம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம் என சூழ்ச்சி செய்வதாக கூறிய ஜெயக்குமார், இது போன்ற பல அடக்குமுறைகளை தாண்டி புடம் போட்ட தங்கமாக அதிமுக வளர்ந்துள்ளது எனவும், இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்
இதையும் படியுங்கள்