BREAKING : முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது எப்.ஐ.ஆர்.. ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பு !
Chandrababu Naidu : ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம், அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஆந்திர சி.ஐ.டி நேற்று சந்திரபாபு நாயுடு மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டியின் புகாரின் அடிப்படையில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் பி.நாராயணா மற்றும் பலர் மீது ஆந்திர சிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி, அமராவதி மாஸ்டர் பிளான் மற்றும் இன்னர் ரிங் ரோட்டில் முறைகேடுகள் இருப்பதாக ஏ.பி.சி.ஐ.டியிடம் எம்.எல்.ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி புகார் செய்தார். அதன் விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மே 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி தெரிவித்துள்ளது.
லிங்கமனேனி ரமேஷ், லிங்கமானேனி வெங்கட சூர்யா ராஜசேகர், LEPL புராஜெக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனி குமார் ஆகியோர் பெயரும் எப்.ஐ.ஆரில் பதிவிட்டிருக்கிறார்கள். ஐபிசி பிரிவுகள் 120பி, 420, 34, 35, 36, 37, 166, 167, 217 ஆகியவற்றுடன், 13(1ஏ) உடன் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(2)ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைத்த வரவேற்பால், பொறுக்க முடியாத ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இப்படியொரு பொய்யான வழக்கை பதிவிட்டு இருக்கிறார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த செய்தி ஆந்திர அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.