இபிஎஸ் உருவப்படம் எரித்த நிர்வாகி.! இரவில் நீக்கம்..! அதிகாலையில் மீண்டும் சேர்ப்பு- பாஜகவில் நடப்பது என்ன.?
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்ததற்காக கட்சியில் இருந்து நேற்று இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நிர்வாகியை அதிகாலையில் மீண்டும் கட்சியில் சேர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக-பாஜக மோதல்
அதிமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியின் மூத்த தலைவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். ஆனால் கடைசி நாள் வரை இழுத்தடித்த பிறகு அதிமுகவிற்கு பாஜக ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து பலரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால் அதிமுக- பாஜக இடையே மோதல் அதிகரித்தது. ஒருவருக்கொருவர் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி..! கட்சியை விட்டு தூக்கி அதிமுகவை சமாதானம் செய்த அண்ணாமலை
கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
இந்தநிலையில் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டமும் நடத்தினர். இதனால் அதிமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து நேற்று இரவு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாஜகவின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதால், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதாலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ்ரோடி தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதிமுகவினரை சமாதானப்படுத்தும் வகையில் கட்சியில் இருந்த நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
இந்த அறிவிப்பு இரவு நேரத்தில் வெளியாகியிருந்த நிலையில் அதிகாலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் அவர்கள், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து தினேஷ்ரோடி அவர்களை 6 மாத காலம் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பில் தினேஷ்ரோடி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்