திமுக எம்.பிக்கே இந்த நிலைனா..? திராவிட மாடல் ஆட்சியில் பாமர மக்களின் நிலை.? ஸ்டாலினை சீண்டும் சீமான்
காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் காவலரைத் தாக்கி சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
திமுக நிர்வாகிகள் மோதல்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டு அருகில் இறகு பந்து அரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திறப்பு விழா கல்வெட்டிலும், பேனரிலும் திமுக எம்பி திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லையென கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் கே.என்.நேருக்கு கருப்புக்கொடி காட்ட முற்பட்டுள்ளனர். இதன் காரணமாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும், திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டுள்ளனர்.இதனையடுத்து காவலநிலையத்திலும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இந்த காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்நிலையத்திற்குள் மோதல்
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வீட்டிற்குள் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. கையில் ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. மேலும், அண்ணன் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியதோடு மட்டுமின்றி, ஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத் திமிரோடு அங்குப் பணியிலிருந்த பெண் காவலரையும் திமுகவினர் கடுமையாகத் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழ்நாட்டில் எந்த அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. சொந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்த நிலை என்றால் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியின் கீழ் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் காவலரைத் தாக்கிய திமுகவினரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி..! கட்சியை விட்டு தூக்கி அதிமுகவை சமாதானம் செய்த அண்ணாமலை