சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.அதிமுகவில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் கு.க.செல்வம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவர் ஜானகி அணியில் இருந்தார்.அதைத் தொடர்ந்து கொஞ்ச காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், கடந்த 1996ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
ஸ்டாலினுக்கு மிகவும் நெருங்கிய நபர்களில் ஒருவராக அறியப்பட்டவர் கு.க.செல்வம். அவருக்குத் தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டது. மேலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய கு.க.செல்வம், ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார்.
இதனிடையே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு வரும் என கு.க.செல்வம் எதிர்பார்த்தார். இருப்பினும், அப்பதவி கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் சிற்றரசுவுக்கு சென்றது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் திமுக நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கத் தொடங்கினார்.
இந்தச் சூழலில் தான் கடந்த 2020இல் அவர் திடீரென தொடர்ந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களையும் கு.க.செல்வம் சந்தித்தார். அப்போதே அவர் பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து திமுகவில் இருந்து அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக திமுக அறிவித்தது. அதன் பின்னர், கடந்த 2021 மார்ச் மாதம் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்தச் சூழலில், கு.க. செல்வம் தற்போது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் இன்று மீண்டும் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார். மேலும், அவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
