எம்எல்ஏவாக பதவியேற்ற ஈவிகேஎஸ்.! தொடங்கியது கோஷ்டி மோதல்.!விஜயதாரணியை பதவியேற்புக்கு அழைக்காததால் புதிய சர்ச்சை
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
ஈவிகேஎஸ் பதவியேற்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி்க்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கூட்டணி கட்சித் தலைவர்கள் தொல். திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், துரை வைகோ, ஜவாஹிருல்லா ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் பங்கேற்பு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றியை தொடர்ந்து சட்டசபையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சித்தலைவர்கள், மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் குறைகளை போக்க தொடர்ந்து முயற்சி செய்வேன் என்றும் உறுதிப்பட கூறினார்.
தனியாக அழைப்பு வைக்கப்படும்
சட்டமன்ற காங்கிரஸ் கொறடா விஜயதாரணிக்கு உரிய அழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஈ வி கே எஸ் இளங்கோவன், அவர்களுக்கு தனியே அழைப்பிதழ் வைக்க வேண்டும் போல என்றும், ஒருவேளை அடுத்த முறை பதவியேற்றால் தனியே அழைப்பு வைத்து பதவி ஏற்பதாகவும் பதிலளித்தார்.சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகையின் பணி சிறப்பாக உள்ளதாக கூறிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவரது பங்களிப்பு திருப்திகரமாக உள்ளதாகவும், சட்டமன்ற தலைவராக செல்வப் பெருந்தகையே தொடரலாம் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்